Nayakan - காணாமல் போன கமல் வாட்ச்.. கண்டுபிடித்து கொடுத்த டான்.. க்ளாசிக் நாயகன் உருவான கதை தெரியுமா?
சென்னை: Nayakan (நாயகன்) கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கல்ட் க்ளாசிக் படமான நாயகன் கமல் ஹாசனின் வாட்ச் தொலைந்ததால் உருவாகியிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?.. இதோ அந்த ப்ளாஷ்பேக்.
இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் கமல் ஹாசன். தனது நடிப்பால் பலரையும் கவர்ந்த அவர் இயக்குநர் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இயக்குநர்களுக்கு எந்த சிரமமும் வைக்காதவர். அப்படி அவர் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் முக்கியமான படம் நாயகன்.

ஒரு நாயகன் உதயம்: சத்தங்கள் ஆர்ப்பரித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் அமைதியை விதைத்தவர்களில் ஒருவர் மணிரத்னம். அவர் கமல் ஹாசனை வைத்து சத்தமே இல்லாமல் செய்த (இயக்கிய) தரமான செய்கைதான் நாயகன். இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, மணிரத்னம் இயக்கம், கமல் ஹாசன் நடிப்பு மாஸ்டர்ஸ் சேர்ந்து ஒரு க்ளாசிக்கை கொடுத்த மேஜிக்தான் நாயகன் திரைப்படம்.
தி பெஸ்ட் நாயகன்: இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டான் சம்பந்தப்பட்ட சினிமாக்கள் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றன, வரவிருக்கின்றன. ஆனால் அத்தனையிலும் வேலுநாயக்கரின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு நாயகன் படத்தை மணிரத்னம் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.
படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகள் பேசுவதற்கு அவ்வளவு ஸ்பேஸ் இருந்தும் ஹீரோவை அடக்கியே வாசிக்க வைத்திருப்பார் மணிரத்னம். நான் அடிச்சா நீ செத்துடுவ, நீங்க நல்லவரா கெட்டவரா என்ற சாதாரண வசனங்கள்கூட மணிரத்னம் மேக்கிங், கமல் ஹாச்னின் நடிப்பால் இன்றளவும் பஞ்ச டயலாக்காக பரிணமித்து நிற்கிறது.
இளையராஜா இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு: மணிரத்னம் மேக்கிங், கமலின் நடிப்பு ஒரு பக்கம் அனல் பறக்க, இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மறுபக்கம் இதம் கொடுத்தன. பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இளையராஜாவின் எத்தனையோ தி பெஸ்ட் ஆல்பங்களில் நாயகனுக்கு எப்போதும் இடம் உண்டு.
அதேபோல் நீ ஒரு காதல் சங்கீதம் பாடலில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு அப்படியே கண்களுக்கு விருந்து. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளுக்கான ஃப்ரேம், எமோஷனல் காட்சிகளுக்கான ஃப்ரேம் என அனைத்திலும் பிசி புகுந்து விளையாடியிருப்பார். இப்படி பல மாஸ்டர்கள் சேர்ந்து கொடுத்த க்ளாசிக் சினிமாவான நாயகன் படம் கமல் ஹாசனின் வாட்ச் தொலைந்ததால் உருவானது என்றால் நம்ப முடிகிறதா. ஆம் அப்படித்தான் நடந்திருக்கிறது. இதோ அந்த ப்ளாஷ்பேக்
மும்பையில் ரூம்: கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைவது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து சென்னையில் கதை விவாதத்திற்காக கமல், மணிரத்னம், எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் ரூம் போட்டு விவாதித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு திருப்தி கொடுக்கக்கூடியது எந்த லைனும் மூன்ரு பேருக்குமே சிக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள் சூழலை மாற்ற எண்ணி மும்பையில் ரூம் போட்டிருக்கிறார்கள்.

தொலைந்துபோன வாட்ச்: மும்பைக்கு சென்று அங்கும் கதை விவாதத்தில் ஈடுபட அங்கும் எந்த லைனும் சிக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க கமல் ஹாசன் அப்போது கட்டியிருந்த ஒரு காஸ்ட்லியான வாட்ச் தொலைந்துபோய்விட்டதாம். அந்த வாட்ச்சை தன்னுடைய ஸ்பெஷலாக கருதி வந்த கமல் ஹாசனுக்கு ரொம்பவே கோபம் ஏற்பட்டுவிட்டதாம். இதுகுறித்து ஹோட்டல் மேலாளரிடம் பேச அவர் ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். அதாவது தமிழ்நாட்டை சேர்ந்த வரது பாயை (வரதராஜ முதலியார்) சந்திக்க சொல்லியிருக்கிறார்.
வரது பாய் எண்ட்ரி: இதனையடுத்து மும்பையில் கோடிகளில் புரளும் கேடிகளிலிருந்து, சாலையோர கேடிகள் வரை அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரதராஜ முதலியாரை சந்திக்க சென்றனராம் மூவரும்.
இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவர்கள், வரதராஜ முதலியாரிடம், உங்களது வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கலாம் என்று நினைக்கிறோம் என கூறியிருக்கின்றனர். அதற்கு வரது பாய், என் வாழ்க்கை வரலாற்றை படமா. என்னால் எதுவும் சொல்ல முடியாது.நான் பிஸியாக இருக்கேன். என் மனைவிட்ட கேட்டுக்கோங்க என்றாராம்.
வந்தது வாட்ச் மட்டுமில்லை: அப்போது எழுத்தாளர் பாலமுருகன்; வரதராஜ முதலியாரிடம் கமலின் வாட்ச் தொலைந்துபோய் விட்டதாகவும், அது அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றும் கூறினாராம். இதனையடுத்து இன்று மாலைக்குள் வாட்ச் வந்து சேரும் என்று உறுதியளித்துவிட்டு வரது பாய் சென்றிருக்கிறார். பிறகு அவரது மனைவியிடம் மூவரும் வரதராஜ முதலியார் பற்றி கேட்க அவரும் பல விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
அதனை கேட்ட அனைவருமே மிரண்டு போய் இதைத்தான் படமாக எடுக்கிறோம் என முடிவெடுத்தனராம். இதற்கிடையே கமல் ஹாசனின் திருடு போன வாட்ச்சும் வந்து சேர்ந்துவிட்டது. ஆக ஒரு வாட்சை தொலைத்து நாயகன் கதையை உருவாக்கியிருக்கிறார்கள் மூன்று பேரும். இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











