Vijayakanth - விஜயகாந்த் என்ட்ரி.. கலைந்த கூட்டம் - கலைஞர் கருணாநிதி அப்செட்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும், விஜயகாந்த்திற்கும் ஏற்பட்ட மன வருத்தத்தின் ஆரம்பப் புள்ளியை மீசை ராஜேந்திரன் பகிர்ந்திருக்கிறார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் அலை கோலிவுட்டில் பலமாக அடித்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார்.
தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

டாப் ஹீரோவான விஜயகாந்த்:
தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.
உதவிய விஜயகாந்த்:
விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த்:
நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கள் வாங்கிய கடனை அடைத்து வருவாயையும் அதிகரித்தார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பலருக்கு பல சமயங்களில் உதவியிருக்கிறார். ஹீரோவாக அறிமுகமாகி இப்போது குணசித்திர நடிகராக வலம் வரும் ஷ்யாமைக்கூட ஒரு பிரச்னையில் இருந்து காப்பாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் கலக்கிய விஜயகாந்த்:
நடிகர், நடிகர் சங்க தலைவர் என கலக்கிய விஜயகாந்த் அரசியலிலும் என்ட்ரி ஆனார். அதில் உள்ள சிறப்பு என்னவென்றால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் அரசியல் களத்தில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே விஜயகாந்த் உள்ளே நுழைந்தார். இப்போது அவரது கட்சி அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் விஜயகாந்த். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளையும் பெற்றவர்.
திமுகதான் காரணம்:
கருணாநிதியுடன் ரொம்பவே நெருக்கமாக இருந்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் யாருக்கும் பயப்படாமல் கருணாநிதிக்கு தங்க பேனா கொடுக்கும் அளவு நெருக்கம் விஜயகாந்த்துக்கு. ஆனால் அவர் அரசியலுக்கு வர காரணமே திமுகதான் என கூறப்பட்டது. கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மன வருத்தங்கள்தான் விஜயகாந்த்தை அரசியலுக்கு இழுத்து வந்ததாக கூறப்படுவதுண்டு. அந்த மன வருத்தத்தின் ஆரம்பத்திற்கு காரணம், விஜயகாந்த்தின் திருமணம் மண்டப இடிப்புதான் என்றும் சிலர் கூறுவார்கள். இந்நிலையில் கருணாநிதிக்கும், விஜயகாந்த்துக்கும் ஏற்பட்ட மன் வருத்தத்தின் ஆரம்பப் புள்ளி குறித்து தெரியவந்திருக்கிற்து.
என்ன காரணம்?:
அதாவது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் திருமணம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றிருக்கிறது. அப்போது திருமணத்துக்கு சென்ற கருணாநிதி வழக்கம்போல் தனது பேச்சால் அரங்கத்தில் இருந்தவர்களை கட்டிப்போட்டிருந்தார். அந்த சமயத்தில் விஜயகாந்த் ஒரு டாப் ஹீரோ. நிலைமை இப்படி இருக்க விஜயகாந்த்தும் முருகதாஸின் திருமணத்துக்கு சென்றிருக்கிறார்.
ஆரம்ப புள்ளி:
அவரை 150 கார்களுடன் வரவேற்றிருக்கிறார்கள். விஜயகாந்த்தின் அசத்தல் என்ட்ரியை பார்த்த கூட்டம் கருணாநிதியின் பேச்சை கண்டுகொள்ளாமல் விஜயகாந்த்தை பார்க்க சென்றுவிட்டது. இது கலைஞர் கருணாநிதிக்கு ரொம்பவே அப்செட்டை கொடுத்துவிட்டதாம். அதுதான் இருவருக்குமான மன வருத்தத்தின் ஆரம்ப புள்ளியாம். இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











