Ilayaraaja - சண்டை போட்ட இளையராஜா.. தனது பதிலால் வாயடைக்க வைத்த பாலுமகேந்திரா.. செம சம்பவம்
சென்னை: ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் வட்டார வழக்கு திரைப்படம் வெளியானது. அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜாவுக்கும், பாலுமகேந்திராவுக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி மக்களுக்கு கொடுத்தார் இளையராஜா.

இசைஞானி: அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.
மோதல்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் கடைசிவரை கருத்து வேறுபாடு தீரவே இல்லை என்று கூறப்படுகிறது. இளையராஜா கடைசிவரை பிரியாமல் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலுமகேந்திரா.
அவருடனும் மோதல்: இளையராஜாவும் பாலுமகேந்திராவும் இணைந்து, வீடு, மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், அது ஒரு கனாக்காலம், வண்ண வண்ணப்பூக்கள், தலைமுறைகள் என பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒரு படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது இரண்டு பேருக்கும் இடையே நடந்த சம்பவம் பற்றி தெரியவந்திருக்கிறது.
இதுதான் நடந்தது: அதாவது, பாலுமகேந்திரா இயக்கிய ஒரு படத்துக்கு இளையராஜா பின்னணி இசையமைத்துக்கொண்டிருந்தபோது, இந்தந்த இடங்களில் இப்படி இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னாராம் பாலுமகேந்திரா. இதனால் இளையராஜா கோபமாகிவிட்டாராம். அதை பாலுமகேந்திராவும் புரிந்துகொண்டுவிட்டார். அப்போது ஒரு படத்தின் இசையை தீர்மானிப்பது யார் என்று பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார் இளையராஜா.
அசரடித்த பாலுமகேந்திரா: அதற்கு பதிலளித்த பாலுமகேந்திரா, 'ஒரு நதி ஆரம்பிக்கும் இடத்தை நதி மூலம் என்கிறார்கள். அதன் தொடக்கம் முதல் கடலில் கலக்கும்வரை எப்படி எல்லாம் செல்கிறது என்று யோசித்து பாருங்களேன். சிறிய ஊற்றாக ஆரம்பித்து போகப்போக சற்று தள்ளி அருவியாகவும், பிறகு சிற்றருவி கலந்து காட்டருவியாக மாறும். பிறகு ஒரு பெரிய பாறையில் இருந்து தோன்றி இரைச்சலுடன் நீர் வீழ்ச்சியாக கொட்டி காட்சியளிக்கும்.
இதுபோல்தான் அதுவும்: வேறு இடத்துக்கு செல்லும்போது பரந்த நீர்த்தேக்கமாகி அதிக ஆழத்துடன் அமைதியாக காட்சி அளித்து கூழாங்கற்களுடன் உரசியபடி வழிந்து ஓடும். சிலு சிலு என்ற சத்தம் நமது மனதை அள்ளும். பிறகு நில இடங்களில் அது பாயும்போது நிலத்தடி நீராகிவிடும். அதுபோல் ஆரம்பம் முதல் கடைசிவரை உருமாறும் அனைத்தையும் தீர்மானிப்பது நிலத்தின் அமைப்புதானே.
இசையும் அப்படித்தான்: அதேபோல்தான் இசையும். ஒரு படத்தின் இசையையும், பின்னணி இசையையும் தீர்மானிப்பது திரைக்கதைதான். இதனை மட்டுமல்ல ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு என சினிமாவில் இருக்கும் அனைத்தையும் முடிவு செய்வது திரைக்கதைதான் என்றாராம். பாலுமகேந்திராவின் விளக்கத்தை கேட்டு வாயடைத்துப்போனாராம் இளையராஜா.


Click it and Unblock the Notifications











