Vijayakanth -தொடர்ந்து 11 படங்கள் தோல்வி..திருமணத்துக்கு முன் விஜயகாந்த்துக்காக ராவுத்தர் செய்த தரமான சம்பவம்
சென்னை: விஜயகாந்த் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 150 படங்கள்வரை நடித்த அவர் ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு கடுமையான போட்டி கொடுத்தவர். இந்த சூழலில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மதுரையை பூர்வீகமாகக்கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் ஆசையோடு திறமையின் துணையையும் தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தரின் துணையையும் வைத்துக்கொண்டு சென்னை வந்தவர். சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை சந்தித்து ஒருவழியாக பட வாய்ப்பு பெற்று ஹீரோவாக மாறினார். ஆரம்பத்தில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிதாக ஓடாத சூழலில் தூரத்து இடி முழக்கம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதனையடுத்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டடித்தன.

ராவுத்தர் துணை: விஜயகாந்த்துக்கு பக்க பலமாக இருந்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்த்துக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் எப்படி இருக்க வேண்டும்; எந்த உயரத்துக்கு செல்ல வேண்டும் என்று பார்த்து பார்த்து செதுக்கியவர் ராவுத்தரே. முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்த் வாங்கிவந்த அட்வான்ஸை மீண்டும் ஏவிஎம்மிடம் கொண்டு போய் கொடுத்துவிட்டு; விஜயகாந்த்திடம் நீ நடித்தால் ஹீரோவாக நடி என்று சொன்னவர்.
ராவுத்தர் பிலிம்ஸ்: மேலும் ராவுத்தர் பிலிம்ஸ் என்று தொடங்கி விஜயகாந்த் நடித்த படங்களை பிரமாண்டமாக தயாரித்தார். அதுமட்டுமின்றி பல புதுமுகங்களுக்கு வாய்ப்பும் கொடுத்தார். இந்த சூழலில் விஜயகாந்த் தொடர்ந்து 11 தோல்வி படங்கள் கொடுத்ததை அடுத்து அவரது திருமணத்துக்கு முன்பு பெரிய வெற்றி படம் ஒன்றை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்போடு ராவுத்தர் செய்த தரமான சம்பவம் குறித்து தயாரிப்பாளர் சிவா கூறியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சிவா பேச்சு: அவர் அளித்த பேட்டியில், "விஜயகாந்த் நடிப்பில் 1988ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் படம் வெளியாகி மெகா ஹிட்டானது. ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான 11 படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. அந்த நேரத்தில்தான் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் திருமணமும் ஃபிக்ஸ் ஆகிவிட்டது. ஆனால் 11 தோல்விப்படங்கள் அமைந்துவிட்டதால் திருமணத்துக்கு முன்பு ஒரு பெரிய வெற்றிப்படத்தை விஜயகாந்த்துக்கு கொடுக்க வேண்டும் என இப்ராஹிம் ராவுத்தர் முடிவு செய்தார்.
புலன் விசாரணை: அப்படி உருவானதுதான் புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இயக்குநராக அறிமுகமானார். படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிந்து படத்தை பார்த்த இப்ராஹிம் ராவுத்தருக்கு படம் திருப்தியை கொடுத்தது. இருந்தாலும் அன்றைய ட்ரெண்டுக்கு கொஞ்சம் படத்தை மெருகேற்ற வேண்டும் என தோன்றியது. எனவே அந்தக் காட்சியை எல்லாம் மீண்டும் ஷூட் செய்யுங்கள்; சில காட்சிகளை சேருங்கள் என்று படத்தில் சில திருத்தங்களை சொல்லில் ரீ ஷூட்டுக்கு பல லட்சங்களை செலவு செய்தார்.
மெகா ஹிட்: ஆர்.கே.செல்வமணி தரப்பும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதன் பிறகுதான் புலன் விசாரணை படத்தின் க்ளைமேக்ஸில் விஜயகாந்த் - சரத்குமார் சண்டை காட்சி வித்தியாசமாக படமாக்கப்பட்டது. ஜனவரி 31ஆம் தேதி விஜயகாந்த்தின் திருமணம், பொங்கல் தினத்தில் வெளியான புலன் விசாரணை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது" என்றார்.
விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர்தான் தமிழ் சினிமாவில் நட்பின் அடையாளங்களாக இருந்தார்கள். சமீபத்தில் அமீர் அளித்த ஒரு பேட்டியில்கூட நானும் பாலாவும் விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் போல் இருக்க ஆசைப்பட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார். அப்படி நட்புக்கு அடையாளமாக இருந்த இரண்டு பேருமே இன்று உயிருடன் இல்லை.


Click it and Unblock the Notifications











