Bala - கேரக்டரை கேட்டு நச்சரித்த ஆனந்த் வைத்தியநாதன்.. மாவு ஆட்டவிட்ட பாலா?
சென்னை: Bala (பாலா) தன்னிடம் கேரக்டரை கேட்டு நச்சரித்த ஆனந்த் வைத்தியநாதனை இயக்குநர் பாலா மாவு ஆட்ட வைத்திருக்கிறார்.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா. முதல் படத்தை காதல் கதையாக எடுத்தாலும் அதை அவர் உருவாக்கிய விதம் புதுமையாக இருந்ததால் படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதில் பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

இளம் ஹீரோக்களை உருவாக்கிய பாலா: தொடர்ந்து அவர் இயக்கத்தில் நான் கடவுள் படம் உருவானது. அந்தப் படத்தில் முதல் அஜித் நடிக்க வேண்டியிருந்தது. சில பிரச்னைகளால் அஜித் வெளியேற ஆர்யா உள்ளே வந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. ஆனால் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் இன்று நல்ல நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பாலாவை சுற்றிய பிரச்னைகள்: சூழல் இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அவரது உருவாக்கம் திருப்தி தராததால் அந்தப் படம் பரணில் வைக்கப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாக கருதப்பட்டது. அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் பாலாவும் அவரது மனைவி மலரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வணங்கானிலும் பிரச்னை: தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துவந்த பாலாவுக்கு ஆசுவாசம் கிடைக்கும் விதமாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். இதனால் பாலாவை சுற்றி என்னதான் நடக்கிறது என அவரது ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும் சூர்யா, கீர்த்தி ஷெட்டி வெளியேறினாலும் அருண் விஜய்யை வைத்து இப்போது வணங்கான் படத்தை இயக்கிவருகிறார் பாலா.
ஆனந்த் வைத்தியநாதன் : இந்தச் சூழலில் அவன் இவன் படத்தின்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் சிறுவர்களை பாடுவதற்கு பயிற்சி கொடுக்கும் ஆனந்த் வைத்தியநாதனை எல்லோரும் அறிவோம். அவருக்கு திரைப்படத்தில் அதுவும் பாலா படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை.
மாவு ஆட்ட விட்ட பாலா: அவரது ஆசை அவன் இவன் படத்தின் மூலம் நிறைவேறியது. பாலா படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற ஆர்வத்தோடு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற அவர் பாலாவிடம் தொடர்ந்து தனக்கு என்ன கேரக்டர் என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த பாலா தனது உதவி இயக்குநர்களிடம் சொல்லி ஆட்டுக்கல்லை வைத்து ஆனந்த் வைத்தியநாதனை மாவு ஆட்டவிடுங்கள் என கூறிவிட்டார்.
அதனையடுத்து தொடர்ச்சியாக நான்கு நாட்கள் ஆனந்த் வைத்தியநாதன் மாவு அரைத்தபடியே இருந்திருக்கிறார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்தார். அவன் இவன் படத்தில் ஆனந்த் வைத்தியநாதன் ஆர்யாவுக்கு தந்தையாக நடித்திருப்பார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











