ரஜினிகாந்த் உயிரைக் காப்பாற்றிய பாக்யராஜ்.. அது மட்டும் அன்னைக்கு நடக்கலனா இன்னைக்கு ரஜினி இல்லை
சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி, மொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 73. பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு பள்ளியை உருவாக்கிய பாக்யராஜ், திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் பலரால் மறக்க முடியாத மனிதநேய செயல்களை செய்தவர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம்.
ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர். குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவருக்கு நீண்ட காலமாக கருத்து மோதல்கள் இருந்து வந்தன. 1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுள் கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது" என்ற அவரது பேச்சு மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். அந்த பேச்சால் ஆத்திரமடைந்த அதிமுக தொண்டர்கள், நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய ரஜினியை சூழ்ந்து தாக்கிய சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்கப்பட்ட ரஜினி: திறந்தவெளி வாகனத்தில் நடிகர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது, சிலர் ரஜினியை தனியாக வேறு வழியாக அழைத்துச் சென்றனர். அப்போது கூட்டத்துக்குள் இருந்த சிலர் அவரை கிள்ளியும், அடித்தும், கல்லெறிந்தும் தாக்கியதாக பின்னாளில் ரஜினிகாந்த் தானே பகிர்ந்துள்ளார். சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
காப்பாற்றிய பாக்யராஜ்: அப்போது நிலைமையை புரிந்துகொண்ட பாக்யராஜ், நேரடியாக அங்கு சென்று காவல்துறை அதிகாரிகளை கடுமையாகக் கண்டித்ததோடு, "இவரை உடனே போலீஸ் வாகனத்தில் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையென்றால் நாளை ஊடகங்களில் உங்கள் பெயரையும் வாகன எண்ணையும் சொல்லிவிடுவேன்" என்று எச்சரித்ததாக ரஜினிகாந்த் நினைவுகூர்ந்திருந்தார். அதன் பிறகே காவல்துறையினர் ரஜினியை பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை அண்மையில் நடைபெற்ற பாக்யராஜின் 50 ஆண்டு திரைப்பயண விழாவில் ரஜினிகாந்த் உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்ந்திருந்தார். "அன்று பாக்யராஜ் மட்டும் வரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்று கூட நினைக்க முடியவில்லை" என்ற அவரது வார்த்தைகள், இருவருக்கும் இடையேயான நட்பையும், பாக்யராஜின் துணிச்சலையும் வெளிப்படுத்தின.
என்றும்: இன்று பாக்யராஜ் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் படைத்த காலத்தால் அழியாத திரைப்படங்களுடன், ஒரு சக கலைஞரின் உயிரைக் காப்பாற்றிய இந்த மனிதநேயச் சம்பவமும் அவரது வாழ்க்கையில் என்றென்றும் நினைவுகூரப்படும் நிகழ்வாகவே இருக்கும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications