Vijayakanth - விஜயகாந்த்தை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றிய ராவுத்தர் - இதோ அந்த சுவாரஸ்ய தகவல்
சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) முரட்டுக்காளை படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக விஜயகாந்த் நடிக்க கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என ராவுத்தர் மறுத்திருக்கிறார்.
மதுரையில் பிறந்த விஜயகாந்த்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னை கிளம்பினார். எல்லோருக்கும் போல் சினிமா அவருக்கும் ஆங்காலம் (அனூகூலமான காலம்) கொடுக்காமல் சோதனைக்காலத்தை கொடுத்தது. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லன் ரோல் எடுத்தார்.

விஜயராஜ் டூ விஜயகாந்த்: வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. இதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
டாப் ஹீரோவான விஜயகாந்த்: தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக முழு காரணமாக இருந்தார்.
உதவிய விஜயகாந்த்: விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார்.
நிழல் ராவுத்தர்: குறிப்பாக விஜயகாந்த் மீது ராவுத்தருக்கு அளவு கடந்த பாசம். சொல்லப்போனால் விஜயகாந்த்தின் நிழலாகவே பல வருடங்களாக இருந்தவர். ராவுத்தர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து மிகச்சிறந்த இயக்குநர்களையும், திறமை மிகுந்த புது இயக்குநர்களையும் விஜயகாந்த்துக்காக கதை செய்ய சொல்லி அதை தயாரித்து விஜயகாந்த்துக்கு ஒரு ஏணியாக இருந்தவர். கடைசி காலத்தில் இரண்டு பேரும் பேசிக்கொள்ளாமல் போய்விட்டாலும் நட்புக்கு அடையாளமாக விளங்கியவர்கள்.
வில்லனுக்கு நோ: இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக விஜயகாந்த் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை துச்சமென தூக்கி எறிந்திருக்கிறார் ராவுத்தர். அதாவது விஜயகாந்த்துக்கு இடையில் கொஞ்சம் ஆரம்பம்போல் சோதனைக்காலம் வந்தது. அப்போது ரஜினிகாந்த் முரட்டுக்காளை படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. அப்போது படத்தில் பவர்ஃபுல் வில்லன் வேண்டும் என்பதற்காக விஜயகாந்த்தை நடிக்க வைக்க முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கிறது படக்குழு.
அந்த சமயத்தில் ராவுத்தர், கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜி (விஜயகாந்த்தை ராவுத்தர் அப்படித்தான் அழைப்பார்) இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கமாட்டார். அவர் நடித்தால் கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பார் என்று கூறிவிட்டாராம். ஒரு கதாநாயகன் வில்லனாக நடித்தால் அவரது திரை வாழ்க்கை தற்கொலை செய்துகொண்டதற்கு சமானம்.
இதனை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் விஜயகாந்த்தை வில்லன் ரோல் பக்கம் செல்லவிடாமல் ஆபத்திலிருந்து தடுத்திருக்கிறார் ராவுத்தர். ஹீரோவாக நடிக்கும்போதே பல படங்களில் வில்லனாக நடிப்பதால் விஜய் சேதுபதியின் ஹீரோ ஸ்தானம் இப்போது திண்டாடிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் தகவலை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











