Ilaiyaraaja: முதல் படம்ன்னு ஆசையா போனேன்... இளையராஜா நோ சொல்லிட்டார்... பிரபல இயக்குநர் கண்ணீர்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா கடந்த வாரம் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சமீபத்தில் அவரது இசையமைப்பில் வெளியான விடுதலை படத்தில், பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இளையராஜா குறித்து பிரபல இயக்குநர் பி வாசு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், அவர் முதல் படத்திற்காக இளையராஜாவிடம் சென்றது பற்றியும் அப்போது நடந்த சம்பவம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.
பி வாசுவிடம் நோ சொன்ன இளையராஜா:தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் பி வாசு. தற்போது ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்திரமுகி 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான இயக்குநராக வலம் வரும் பி வாசு, பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
சுரேஷ், சாந்தி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் பி வாசு இயக்கிய இந்தப் படம் 1981ம் ஆண்டு வெளியானது. ரசிகர்களின் வரவேற்புடன் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 'கோடை கால காற்றே', 'ஆனந்த ராகம்', 'பூந்தளிர் ஆட' பாடல்கள் சுப்பர் ஹிட் அடித்தன. இந்தப் படம் தமிழ் உட்பட தெலுங்கிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்தது குறித்து இயக்குநர் பி வாசு மனம் திறந்துள்ளார். பன்னீர் புஷ்பங்கள் தனது முதல் படம் என்பதால் இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என ரொம்பவே ஆசையாக இருந்துள்ளார் பி வாசு. இதனை இளையராஜாவிடம் சொன்ன பி வாசு, பன்னீர் புஷ்பங்கள் கதையையும் கூறியுள்ளார். கதையை கேட்ட இளையராஜா இசையமைத்து தரவும் ஓக்கே சொல்லிவிட்டாராம்.
இந்தப் படத்தை மொத்தமே 5 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கவே பிளான் செய்துள்ளார் பி வாசு. ஆனால், இளையராஜா செம்ம உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் அவரது சம்பளம் மட்டும் 1 லட்சம் ரூபாயாம். இதனால், இளையராஜாவிடம் உங்களுக்கு என்ன சம்பளம் தர வேண்டும் என தயங்கி தயங்கிக் கேட்டுள்ளார் பி வாசு. ஆனால், ராஜாவோ பாடல்களை கம்போஸ் செய்துகொடுக்கும் வரை சம்பளம் பற்றி பேசவே இல்லையாம்.

இறுதியாக படத்துக்கு ரீ-ரெக்கார்டிங் முடிந்து ரிலீஸாகவும் ரெடியாகிவிட்டதாம். அப்போதும் இளையராஜாவிடம் சென்று சம்பளம் எவ்வளவுன்னு சொல்லுங்க சார், எங்க பட்ஜெட்டே 5 லட்சம் தான் எனக் கூறியுள்ளார். அதற்கு பி வாசுவை பார்த்து சிரித்த இளையராஜா, "இதுதான்யா முதல் படம், ஃபர்ஸ்ட் இது ஹிட்டாகட்டும், அப்புறம் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம், அதுவரை சம்பளம் பத்திலாம் யோசிக்க வேண்டாம்" எனக் கூறினாராம்.
அதன்பின்னர் பி வாசு எவ்வளவோ பேசிப் பார்த்தும் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கு சம்பளமே வாங்கவில்லையாம் இளையராஜா. இந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்துள்ள பி வாசு ஆனந்த கண்ணீருடன் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பன்னீர் புஷ்பங்கள் வெற்றிப் பெற்றதும் தொடர்ந்து பணக்காரன், சின்ன தம்பி, நடிகன், மன்னன், வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐபிஎஸ் என படங்கள் பி வாசு - இளையராஜா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











