மொத்தம் 30 நிமிடங்கள்.. 6 பாடல்கள் ரெடி.. சம்பவம் செய்த இசைஞானி.. பிறந்தநாள் வாழ்த்துகள் இளையராஜா
சென்னை: இசைஞானி என்று ரசிக்ர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார். தற்கால இசையமைப்பாளர்களுக்கும் போட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா. இந்தச் சூழலில் அவர் இன்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
அவ்வளவு பிஸி: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
1500 படங்கள்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசைத்தான் நமது அப்பாக்கள் தலைமுறைக்கும் சரி, நமது தலைமுறைக்கும் சரி, நமது பிள்ளைகள் தலைமுறைக்கும் சரி ஆறுதல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போதைய 2கே கிட்ஸையும் இளையராஜா பெரும்பாலும் கவர்ந்துவிட்டார் என்பதுதான் கள எதார்த்தம். ஏனெனில் இப்போது இசையைவிட பாடலில் சத்தங்கள் மட்டுமே அதிகம் இருக்கின்றன. அதனால் 2கே கிட்ஸுகளுக்கும் இளையராஜவின் பாடல்கள் மட்டுமே ஆசுவாசம்.
பிறந்தநாள்: இந்தச் சூழலில் அவர் இன்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். எனவே இளையராஜா செய்த தரமான சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது கமல் ஹாசன் நடித்த காக்கிச்சட்டை படத்தின் கம்போசிங்கிற்காக இளையராஜா கொடைக்கானல் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு சில நாட்கள் அறை போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவரோ அங்கு போன முதல் நாளில் சில மணிநேரங்களிலேயே காக்கிச்சட்டை பாடல்களை போட்டு முடித்துவிட்டாராம்.
பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அவர் சரி சும்மா சில ட்யூன்களை போட்டு வைப்போம் என்று போட ஆரம்பித்து 30 நிமிடங்களில் அந்த ஆறு ட்யூன்களையும் போட்டுவிட்டாராம். அது இளையராஜாவுக்கும் பிடித்துப்போல் இந்த மொத்த ட்யூன்களையும் ஒரே படத்துக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதனையடுத்து சென்னை திரும்பிய அவரை பஞ்சு அருணாச்சலம் சந்திக்க; அந்த ஆறு ட்யூன் விஷயத்தை அறிந்திருக்கிறார். உடனே அதை இளையராஜாவிடம் கேட்க; அதற்கு அவரோ ஒரே படத்தில் வைத்தால் தருகிறேன் என்று கண்டிஷன் போட; அதற்குத்தான் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
பிறகு இந்த விஷயம் இயக்குநர் ஆர்.சுந்தரராஜனுக்கு பஞ்சு மூலமாக தெரிந்திருக்கிறது. உடனே ஒரு கதையை எழுதி அந்த ஆறு ட்யூன்களையும் வைத்திருக்கிறார் சுந்தரராஜன். அப்படி உருவான படம்தான் வைதேகி காத்திருந்தாள். பொதுவாக ஒரு கதைக்காக பாடல்கள் உருவாவது நடைமுறை. ஆனால் பாடல்களுக்காக ஒரு கதை உருவானது வரலாறு. இப்படிப்பட்ட தரமான சம்பவத்தை செய்த இளையராஜாவுக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











