இளையராஜா திட்டிட்டார்.. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டார்.. க்ளாசிக் பாடகரின் மகள் வேதனை
சென்னை: இளையராஜா பல வருடங்களாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். அவரது இசையமைப்பில் உருவான பாடல்களுக்கும், உருவாகும் பாடல்களுக்கும் இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். மேலும் இந்த வயதிலும் அவர் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு கேட்டுவருகிறார்கள். சமீபத்தில்கூட அவர் ஒரு சிம்பொனி இசையை அரங்கேற்றியிருந்தார். இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்கிற பெருமையையும் இளையராஜா இதன் மூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அவர் மிகவும் தலைக்கனம் பிடித்தவர் என்ற விமர்சனம் காலங்காலமாக தொடரும் சூழலில் மூத்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் மகள் அளித்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
இசைஞானி, மேஸ்ட்ரோ என்று ரசிகர்களால் புகழப்படும் இளையராஜா கடந்த பல வருடங்களாக தன்னுடைய ஆளுமையை தொடர்ந்து திரையிசையில் காண்பித்துவருகிறார். 1975ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவரை இந்தத் தலைமுறையினரும் ரசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரது பல பாடல்களை தற்கால இயக்குநர்கள் தங்களது படங்களில் பயன்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார்கள். அதற்கு இளையராஜா கடுமையான எதிர்வினையை ஆற்றுவதுண்டு. அவர் அப்படி நடந்துகொள்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும்; அவரது நிலைமையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் என்பது இசைஞானி ரசிகர்களின் கருத்து.

சிம்பொனி நாயகன் இளையராஜா: திரைப்படங்களில் மட்டும் இசையமைத்துவந்த அவர் சமீபத்தில் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றையும் லண்டனில் அரங்கேற்றி முடித்தார். அவர் சிம்பொனி அரங்கேற்றப்போவதாக அறிவித்ததை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் லண்டன் அப்போலோ அரங்கத்தில்தான் கண்களை வைத்திருந்தது. சொன்னபடியே அரங்கேற்றி முடித்து கெத்து காண்பித்தார் அவர். இதன் காரணமாக இந்தியாவிலிருந்து சென்று சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலும் விரைவில் இசை கச்சேரி செய்யவிருக்கும் அவர்; அதில் சிம்பொனியையும் இசைத்து காண்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
வரிசையாக படங்கள்: திரைப்படங்களை பொறுத்தவரை கடைசியாக அவர் விடுதலை 2, ஜமா, தினசரி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். விடுதலை 2 படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். முதல் பாகம் போலவே இந்தப் பாகத்திலும் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும்மே மாஸ்டர் ரகத்தில் இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டினார்கள். அதேபோல் முதல் பாகத்தில் அவரது பின்னணி இசையின் மீது சில விமர்சனங்கள் எழுந்தன. அதுபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்திலும் எழாமல்படி பார்த்துக்கொண்டார் அவர். மேலும் சில படங்களுக்கு அவர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுக்கு தலைக்கனமா?: இதற்கிடையே இளையராஜா உச்சக்கட்ட தலைக்கனம் பிடித்திருக்கிறார்; அதனால்தான் அவர் யாரையும் மதிப்பதில்லை; பாடகர்களை எல்லாம் திட்டுகிறார் என்ற விமர்சனமும் அவர் மீது காலங்காலமாக வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அவர் தரமான பதிலடியை கொடுத்துவருகிறார். முக்கியமாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'எனக்கு தலைக்கனம் இல்லாமல் வேறு யாருக்கு தலைக்கனம் இருக்கும்' என்று தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியை பார்த்த அவரது ரசிகர்கள்; இத்தனை வருடங்கள் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு ராஜா தன்னுடைய பாணியிலேயே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார். இனிமேலும் அவரை சீண்டாமல் அவரது இசையை ரசித்துவிட்டு செல்வோம்; அவரது தனிப்பட்ட குண நலன்கள் மீது எதற்காக போலி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தார்கள்.

டி.எம்.எஸ். மகள் பேட்டி: இந்நிலையில் இளையராஜா இசையில் பாடியபோது தன்னுடைய தந்தையை அவர் திட்டிவிட்டதாக மூத்த பாடகரான டி.எம்.சௌந்தரராஜனின் மகள் பேட்டியளித்திருக்கிறார். அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருமுறை இளையராஜா இசையில் என்னுடைய தந்தை பாடினார். அப்போது அவரிடம் இளையராஜா, 'இங்கே நான்தான் இசையமைப்பாளர். நான் சொல்லும்படிதான் பாட வேண்டும். அங்கே அப்படி பாடினேன் இங்கே இப்படி பாடினேன் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டார்.
கஷ்டப்பட்ட என்னுடைய அப்பா: அது அப்பாவுக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்துவிட்டது. அந்த சம்பவத்துக்கு பிறகு ராஜாவின் இசையில் அப்பா பாடவில்லை. அதேசமயம் எல்லோரிடமும் அவர், 'இளையராஜா ரொம்ப பெரிய ஆளாக வருவார்' என்றுதான் சொல்வார். ஆனால் ராஜாவோ அப்படி இல்லை. அப்பாவை நேரில் பார்க்கும்போது மட்டும்தான் ஆஹோ ஓஹோ என்று சொல்வார். பின்னாடி என்ன பேசுவார் என்று யாருக்கும் தெரியாது. அதற்கு பிறகு இளையராஜாவும் என்னுடைய அப்பாவை பாட வைப்பதற்கு விரும்பவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
அப்பாவுக்கு காது கேட்காமல் போய்விட்டது: என்னுடைய அப்பா அதிகம் ஹை பிட்சில்தான் பாடியிருக்கிறார். அப்படி பாடி பாடி ஒருகட்டத்தில் அப்பாவுக்கு காதுகள் கேட்காமல் போய்விட்டன. அப்படி காது கேட்காமல் இருந்தபோதுதான் இளையராஜாவுக்கும், அவருக்கும் சண்டை வந்தது. இனியும் இப்படியே விட்டால் சரியாக வராது என்றுதான் காது கேட்கும் மெஷினை அவர் வைத்துக்கொண்டார். அப்பா போன்றுதான் பி.சுசீலாவுக்கும். அவரும் ஹை பிட்சில் பாடி காது கேட்காமல் போய்விட்டது. எல்லோருக்கும் பெயர் வாங்க வேண்டும் என்ற ஆர்வம்தான். அதனால்தான் அவர்களுக்கு இப்படி நிலைமை உருவாகிவிடுகிறது.
ஹீரோ, ஹீரோயின்கள் அப்படி இல்லை: இன்னும் சொல்லப்போனால் எனது தந்தை பாடும்போது இருந்த மாதிரி அதற்கு பிறகு ஹீரோ ஹீரோயின்கள் எல்லாம் இல்லை.ரவிச்சந்திரன், முத்துராமன், கமல், ரஜினி என அனைவருக்கும் அப்பா பாடியிருக்கிறார். அதேபோல் அப்பாவின் குரலுக்கேற்ற ஹீரோவும் இல்லை என்று சொல்லலாம். இருந்தாலும் என்னுடைய அப்பா அதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. சினிமா வாய்ப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் இசை கச்சேரிகள் அவருக்கு வர ஆரம்பித்துவிட்டன. அதில் அப்பாவின் கவனம் முழுக்க முழுக்க செல்ல ஆரம்பித்துவிட்டது.
நன்றாகத்தான் பாடினார் அவர்: இதற்கிடையே 1980வரை நன்றாகத்தான் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு பிறகு அவரால் நிறைய பாட முடியவில்லை. அப்பா சினிமாவில் அறிமுகமானபோது இவர்தான் சின்ன வயதுக்காரர். அவருடன் பாடிய பாடகிகளான கே.பி கோமலா போன்றோர் எல்லாம் அப்பாவோடு வயதில் மூத்தவர்கள். அவர்களுடன் பாடும்போது தனக்கு ரொம்பவே பயமாக இருக்கும் என்று அப்பா சொல்லியிருக்கிறார். மேலும் பின்னணி பாடகி பானுமதி எல்லாம் தன்னை ரொம்பவே மிரட்டுவார் என்றெல்லாம் அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











