HBD Raja: ராஜா ராஜாதான்.. மற்றவர்களை மோசமாக நடத்துறது எதனால்.. இளையராஜாவே சொன்ன விஷயம்!
சென்னை: இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகத்தினர் மட்டும் இல்லாமல் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இளையராஜாவின் இசை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. இப்படி இருக்கும்போது இளையராஜாவின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்றால், ராஜா தலைக்கனம் கொண்டவர் என்பதுதான். சில நேரங்களில் இளையராஜா மிகவும் கோபமாக நடந்து கொண்டிருக்கிறார். அவரது இது போன்ற நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அவரே தெரிவித்ததை இந்த தொகுப்பில் காணலாம்.
இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என பல புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரர் இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இவர், இன்றைக்கு சர்வதேச இசை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார். தனது 82 வது வயதில் தனது முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தார்.
1500 படங்களுக்கு மேல் இவரது இசையில் படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் இவரது இசையில் வெளியான ஜமா, விடுதலை பாகம் 2 ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இசைஞானி இளையாராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொண்டாடும் ரசிகர்கள் அவரது சில நடவடிக்கைகள் குறித்து மிகவும் விமர்சித்துள்ளார்கள். குறிப்பாக, பொதுவெளியில் மற்றவர்களை மிகவும் கடுமையாக திட்டுவது, கடுமையாக பேசுவது உள்ளிட்டவற்றை கூறலாம்.

ஒரு மாதிரியாக: ஆனால் இது தொடர்பாக, அதாவது, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என்பது குறித்து அவரே பழைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, " நீங்கள் எல்லாரும் என்னுடைய தொந்தரவுகளை சகித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் பேசுவது, நான் திட்டுவது, நான் கோபப்படுவது, எனக்கு இது தெரிந்தாலும் என்னால் இதனை நிறுத்த முடியவில்லை பார்த்தீர்களா? எனக்கு இது தெரிகிறது, உங்களை டார்ச்சர் செய்கிறேன், உங்களை கோபப்படுத்துகிறேன், எல்லோரையும் ஒரு மாதிரியாக நடத்துகிறேன் என்பது எல்லாம் எனக்குத் தெரிகிறது. ஆனால் என்னால் நிறுத்த முடியவில்லை. இது என்னுடைய சுபாவமாக இருக்கிறது. என்னால் என்னையே சகித்துக் கொள்ள முடியவில்லை என்று தானே அர்த்தம்" என்று பதில் அளித்துள்ளார்.
சுய விமர்சனம்: இசைஞானி இளையராஜாவின் இந்த பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதாவது, ராஜா தான் நடந்து கொள்ளும் விதத்தை சரி என்று முறையிடாமல், தன் மீதான விமர்சனத்தை தானே முன்வைத்துள்ளது பலருக்கும் ஆச்சரியமளிக்கும் ஒன்றாக உள்ளது. இளையராஜா போன்ற புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் தன் மீதான விமர்சனத்தை கேள்வியாக முன் வைக்கும் முன்னரே, தானே தன்னை விமர்சித்து பேசியுள்ளது ஆச்சரியம் தான் என்று பேசி வருகிறார்கள். தற்போது இந்த பழைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிறந்த தேதி மாற்றம்: இளையராஜாவின் உண்மையான பிறந்த தேதி ஜூன் 3. ஆனால் அன்றைய தினம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால் தனது பிறந்த நாளை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார். அது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மீது இருந்த அன்பினால் இதைச் செய்துள்ளார். இளையராஜாவுக்கு இசைஞானி என்று புனைப்பெயர் வைத்ததே, கலைஞர் கருணாநிதிதான்.


Click it and Unblock the Notifications











