அஜித் கைவிட்டது ஷங்கரின் இத்தனை படங்களா?.. யப்பா தலையே சுத்துதே
சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டியிருந்த படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர். சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த துணிவு படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தனது 62ஆவது படத்தில் நடித்திருக்கிறார் அஜித். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. துணிவு வெற்றி பெற்றிருப்பதால் இந்தப் படமும் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்களின் வருத்தம்
அஜித் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்திய சினிமாவின் அடையாளம் என கருதப்படும் மணிரத்னம் இயக்கத்திலோ இல்லை ஷங்கரின் இயக்கத்திலோ ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அஜித் ரசிகர்கள் எப்போதும் வருத்தப்படுவது உண்டு. குறிப்பாக மணிரத்னம் கமர்ஷியலாக எடுக்காத இயக்குநர் ஆனால் ஷங்கர் கொஞ்சம் கமர்ஷியலாகவும் எடுக்கக்கூடியவர் என்பதனால் ஷங்கருடனாவது மட்டும் அஜித் இணைந்திருக்கலாம் என்பதே அவர் ரசிகர்களின் குரலாக நீண்ட காலம் இருக்கிறது. இந்தச் சூழலில் அஜித் ஷங்கரின் ஒன்று அல்ல இரண்டு அல்ல மூன்று படங்களில் நடித்திருக்க வேண்டியவர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.

ஜீன்ஸை தவறவிட்ட அஜித்
ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் ஜீன்ஸ். அவருடன் ஐஸ்வர்யா ராய், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் 90 சதவீத காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டிருக்கும். முதல்முதலில் ஜீன்ஸ் கதையை அஜித்திடம்தான் கூறினாராம் ஷங்கர். அந்த சமயத்தில் அஜித் கிட்டத்தட்ட 6,7 படங்களில் நடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஜீன்ஸ் படத்துக்காக குறிப்பிட்ட நாள்களை சொல்லி அத்தனை நாள்களுக்கான கால்ஷீட்டையும் மொத்தமாக வேண்டும் என கேட்டிருக்கிறார் ஷங்கர். ஆனால் தன்னை நம்பி நிறைய பேர் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்; இப்போது உங்களுக்கு மொத்தமாக கால்ஷீட்டை கொடுத்துவிட்டால் அவர்களது படங்கள் பாதிக்கப்படும் என கூறி ஜீன்ஸ் படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம் அஜித்.

ஜீன்ஸுக்கு அடுத்ததாக முதல்வன்
ஜீன்ஸ் படத்தில் தவறவிட்ட வாய்ப்பை முதல்வன் படம் மூலம் நிறைவேற்றிவிடலாம் என கணக்கு போட்டாராம் ஷங்கர். எனவே முதல்வன் கதையை எழுதி முடித்துவிட்டு அஜித்திடம் சென்ற ஷங்கர் கதையை கூறினாராம். கதையை கேட்டுவிட்டு அரசியல் சாயம் பூசிய கதையில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அதுமட்டுமின்றி அதுபோன்ற கதைகளில் நடிப்பதற்கு எனக்கு முழு தகுதியும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று கூறி முதல்வனிலிருந்தும் விலகிவிட்டாராம். இதனையடுத்து ஷங்கர் முதல்வன் கதையோடு ரஜினியிடம் போனதாகவும், அவரும் அரசியலை காரணம் காட்டி விலகிவிட்டதாகவும், பிறகுதான் அர்ஜுன் உள்ளே வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

ஜீன்ஸ், முதல்வன் வரிசையில் எந்திரன்
இப்படி ஜீன்ஸ், முதல்வன் என்ற இரண்டு மெகா ஹிட் படங்களிலும் இணைந்து பணியாற்ற முடியாததால் எந்திரன் படம் மூலம் அஜித்துடன் இணைந்துவிடலாம் என ஷங்கர் முடிவெடுத்தாராம். ஆனால் எந்திரன் கதையை கேட்ட அஜித்; இதுபோன்ற பிரமாண்ட கதைகளில் நடித்தால் தனக்கு செட் ஆகாது என கூறி அந்தப் படத்திலிருந்தும் விலகிவிட்டாராம். இதனை கேட்ட ஷங்கர், ஜீன்ஸ் பட காலத்திலிருந்தே நம்மால் இணைந்து பணியாற்ற முடியவில்லை என எவ்வளவோ கூறியும் எந்திரனில் நடிக்க மறுத்துவிட்டாராம் அஜித். இப்படி அவர் தவறவிட்டதாக கூறப்படும் ஷங்கரின் படங்கள் அனைத்தும் மெகா ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











