நிறைய சண்டைகள்.. நான் ஜெயம் ரவிக்குத்தான் சப்போர்ட்.. மகளுக்கு கோபம்.. ஓபனாக பேசிய மாமியார்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் ரவி எடுத்த முடிவு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி. இருந்தாலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ரவி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதன் காரணமாக திரைத்துறையிலும், சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக இந்த விவாகரத்து விவகாரம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் தனது திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. அதனையடுத்து இதுதொடர்பாக அவரது மனைவி ஆர்த்தி என்ன சொல்லப்போகிறார் என்பதில் அனைவரது கவனமும் இருந்தது. இன்று ஆர்த்தி கொடுத்த விளக்கத்தில், ஜெயம் ரவி எடுத்தது தனிப்பட்ட முடிவு. அவரிடம் பேசுவதற்கு பல முறை முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர் கொடுக்கவில்லை. நானும் எனது இரண்டு குழந்தைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

மாமியார் காரணம்: இதற்கிடையே ஜெயம் ரவியை அவரது மாமியார் சுஜாதா முழு கட்டுப்பாட்டில் வைக்க முயன்றதாகவும்; ரவிக்கான கதைகள், இயக்குநர்களையும் அவரும் ஆர்த்தியும் தேர்ந்தெடுத்தார்கள். அதுதான் இந்தப் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று ஒருதரப்பினர் தொடர்ந்து கூறிவந்தனர். இந்தச் சூழலில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா ரவி குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சுஜாதா பேட்டி: அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த அந்தப் பேட்டியில், “ ஜெயம் ரவியை காதலிக்கிறேன் என்று ஆர்த்தி என்னிடம் சொன்னபோது உண்மையில் எனக்கு ஷாக்தான் வந்தது. ஏனெனில் அவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம். நாங்கள் வேறு. அப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் எப்படி கனெக்ட் செய்துகொண்டார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அதற்கு பிறகுதான் ஆர்த்தியும், ரவியும் நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டபோது காதல் உருவானது தெரிந்தது.

ரவிக்குத்தான் சப்போர்ட்: ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை. அவர்களுக்குள் நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான சமயங்களில் நான் ரவிக்குத்தான் ஆதரவு கொடுப்பேன். அங்குதான் மேற்கொண்டு பிரச்னையே ஏற்படும். ஆர்த்தி என்னிடம் வந்து, நீ உனது மாப்பிள்ளைக்கு ஆதரவு கொடுக்கிறாயா என்று கேட்பார். ரவி கொஞ்சம் நிதானமானவர். ஆனால் ஆர்த்தி அப்படி இல்லை. சின்ன விஷயத்துக்குக்கூட உடனே டென்ஷன் ஆவாள்.
வாக்குவாதம் வரும்: அதனால் நான் ரவிக்கு சப்போர்ட் செய்வேன். அப்போது ஆர்த்திக்கும் எனக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எனது வீட்டில் எல்லோருமே பெண் பிள்ளைகள்தான். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். என்னுடைய தங்கைக்கு மூன்று பெண் பிள்ளைகள். அக்காவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இப்படி எங்களை சுற்றி எல்லாமே பெண்கள்தான். அதனால் எங்களுக்கு ஆண்கள் பெரிதாக பரிட்சயமில்லை. முதன்முதலில் எங்கள் வீட்டில் கால் வைத்த ஆண் மகன் என்றால் ரவிதான். பேரன் வேண்டுமென்று வேண்டினேன். அதேபோல் ரவி மூலம் எனக்கு இரண்டு பேரன்கள் கிடைத்திருக்கிறார்கள்” என்றார். முன்னதாக சுஜாதா ஜெயம் ரவியை வைத்து மூன்று படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











