எப்போ சார் கதை சொல்வீங்க?.. ஹீரோ கேட்ட கேள்வி.. உச்சக்கட்ட டென்ஷனான ஹரி
சென்னை: கோலிவுட்டில் முக்கியமான கமர்ஷியல் இயக்குநர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் ஹரி. அவரது ஒவ்வொரு படமும் கமர்ஷியல் ப்ளஸ் ஃபேமிலி எமோஷனோடு கலந்திருக்கும். இதனாலயே அவரது படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் செல்வார்கள். பல ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த சில காலமாக தடுமாறிக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க பத்திரிகையாளர் அந்தணன் ஹரி குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ஹரி. தமிழ் என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக அதில் இடம்பெற்றிருந்த சண்டை காட்சிகளும், காமெடி காட்சிகளும் கோலிவுட்டுக்கு பக்காவான கமர்ஷியல் இயக்குநர் கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தின.

ஹரியின் சாமி: ஒரு இயக்குநருக்கு முதல் படத்தைவிடவும் இரண்டாவது படம் ரொம்பவே முக்கியம். அந்தவகையில் ஹரி தனது இரண்டாவது படமாக விக்ரமை வைத்து சாமி படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தை இன்று பார்த்தாலும் 90ஸ் கிட்ஸ் அனைவரும் தங்களை மறந்துவிடுவார்கள். பரபர ஆக்ஷன், எமோஷன், காதல் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக அந்தப் படம் அமைந்திருந்தது. முக்கியமாக படத்தின் வசனமும், விக்ரமின் நடிப்பும் பட்டையை கிளப்பின.
முன்னணி இயக்குநர்: சாமி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஹரி கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராக மாறினார். சாமி படத்துக்கு பிறகு அவர் இயக்கிய கோவில் படம் ஃபீல் குட் படமாக இருந்தது. அதனைப் பார்த்த அனைவருமே அட சாமி படத்தை இயக்கிய ஹரியா இதற்கு இயக்குநர் என்று ஆச்சரியம்தான் பட்டனர். அதிலும் சிம்புவை வேறு ஃப்ளேவரில் காண்பித்து அதகளம் செய்திருந்தார் ஹரி. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய தாமிரபரணி, வேல் படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன.
சிங்கம் சூர்யா: ஹரிக்கு இன்னொரு சாமி என்றால் அது சிங்கம் படம். சூர்யாவின் 25ஆவது படமாக வெளியான சிங்கம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதேபோல்தான் சிங்கம் 2 படமும். அந்தப் படத்தின் பரபர திரைக்கதை ரசிகர்களை அப்படியே கட்டிப்போட்டது. ஆனால் சிங்கம் 2 தான் ஹரிக்கு கடைசி ஹிட் படமும்கூட. அதற்கு பிறகு அவர் இயக்கிய பூஜை, சிங்கம் 3, சாமி 2, யானை படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாக அவர் தன்னை மீண்டும் நிரூபிக்கும் வேட்கையில் இருக்கிறார். ரத்னம் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அவருக்கு நல்ல கம்பேக்காக அமைந்திருக்கிறது.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் வீடியோ ஒன்றில் ஹரி குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "சாமி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹரி ஒரு படம் இயக்குவதாகவும்; அதில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் முடிவு செய்யப்பட்டது. சாமி பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் ஸ்ரீகாந்த்திடம் ஹரி கதை சொல்லாமல் இருந்தார்.
டென்ஷனான ஹரி: எனக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் பழக்கம். அப்போது ஹரி சார் இன்னும் கதையே சொல்லல என்று கூறினார். அந்த சமயத்தில் ஒருமுறை ஹரியை சந்திப்பதற்காக சென்றேன். அப்போது அவரிடம் நான், 'நீங்க எப்போ கதை சொல்வீங்கனு ஸ்ரீகாந்த் கேட்கிறார் சார்' என்று சொன்னேன். உடனே ஹரி, அப்படியா கேட்டார் என்று சொல்லிவிட்டு; ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஃபோன் செய்து; 'சார் நீங்களும், நானும் ஒரு படம் பண்ணுறதா இருந்துச்சுல சார். அது நாம பண்ணமாட்டோம்' என்று சொல்லி ஃபோனை கட் செய்துவிட்டார்.
பிறகு என்னிடம், சார் ஒரு இயக்குநர் சீனை பிடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுவோம் தெரியுமா சார். அவ்வளவு யோசிப்போம். புதுசு புதுசா எழுதுவோம். ஆனால் நீங்களோ கதை எப்போ சொல்வீங்கனும் கேட்கிறீங்க. உங்களை நான் தப்பு சொல்லல. ஒரு ஹீரோவுக்கு கதை சொல்லாம ஷூட்டிங் கூட்டிட்டு போய்டுவேனா நான். அந்த அளவுக்கூடவா அவர் யோசிக்கமாட்டார். இனி என் லைஃப்ல ஸ்ரீகாந்த்த வெச்சு ஒரு படம்கூட பண்ணமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











