Vadivelu - தன்னுடன் நடித்தவர்களை பிச்சைக்காரர்கள் போல் நடத்தினாரா வடிவேலு?.. வெளியான ஷாக் சம்பவம்
சென்னை: Vadivelu (வடிவேலு) நடிகர் வடிவேலு தன்னுடன் நடித்தவர்களை எப்படி நடத்துவார் என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.
வடிவேலுவுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பு, உடல்மொழி, வசனம் பேசும் ஸ்டைல் என அனைத்துமே சிரிப்பை வரவைக்கக்கூடியவை. அதனால்தான் பல வருடங்களாக கோலிவுட்டில் கோலோச்சியிருந்தார். குறிப்பாக அவரது நகைச்சுவை பிறரை இழிவுப்படுத்தாமல் இருந்ததால் தனித்து தெரிந்துகொண்டிருக்கிறது.

பஞ்சாயத்து: கரியரின் உச்சத்தில் இருந்தபோது அவர் செய்த சில விஷயங்களால் அவரை சுற்றி பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக கோலிவுட்டில் பலமாக வீசிக்கொண்டிருந்த வைகைப்புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து ஒருகட்டத்தில் அமைதியாகிவிட்டது. அதனையடுத்து அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மாமன்னன்: இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி அடைந்தது ஒருபக்கம் இருந்தாலும் வடிவேலுவை காண சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அடுத்த படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் காமெடி இல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடத்தை ஏற்றிருந்தார். அவரது நடிப்பை பார்த்த பலரும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் மாதிரியான ரோல்கள் அதிகம் கிடைக்கலாம் என கூறினர்.
குற்றச்சாட்டு: வடிவேலு செகண்ட் இன்னிங்ஸ் இப்படி நல்லபடியாக ஆரம்பிக்க அவருடன் நடித்த பலர் அவர் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். வடிவேலு தங்களை மதிக்கவே மாட்டார்; யாரையும் வளரவே விடமாட்டார் என வெளிப்படையாக பேசிவருகின்றனர். பாவா லட்சுமணன், சிஸர் மனோகர், கொட்டாச்சி, மீசை ராஜேந்திரன் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
எல்லாம் வதந்தி: ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு வடிவேலு இதுவரை எந்த பதிலையும் கொடுக்காமல் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டிவருகிறார். அவர் அமைதியாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் வடிவெலு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் இவை எல்லாமே திட்டமிட்ட அவதூறு எனவும் கூறுகின்றனர். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கும் விஷயம் ஒன்று பகீர் கிளப்பியிருக்கிறது.

என்ன நடந்தது: அதாவது ஒரு பேட்டிக்காக வடிவேலுவை சந்தித்தாராம் செய்யாறு பாலு. அப்போது வடிவேலுவின் அலுவலகம் சாலிகிராமத்தில் இருந்திருக்கிறது. ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த பேட்டியை எடுத்திருக்கிறார் பாலு. அந்த சமயத்தில் வடிவேலுவுடன் நடித்தவர்கள் அனைவரும் அவரது ஆஃபிஸ் வாசலில் வந்து நின்றிருக்கிறார்கள். இவர் பேட்டிக்கு இடை இடையே சென்று பால்கனியிலிருந்து எட்டி பார்த்தபடி வந்திருக்கிறார். பிறகு பேட்டியும் முடிந்திருக்கிறது.
வாய்ப்பு கொடுக்கமாட்டார்: பேட்டியை முடித்து வந்த செய்யாறு பாலு கீழே நின்றவர்களிடம் என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார். அதற்கு அவர்கள், 'இல்ல ஷூட்டிங் முடிச்சிட்டு இங்க வருவோம். அவர் வந்து பார்த்துட்டு பார்த்துட்டு போவாரு. உட்காரக்கூட கூடாது. அவர் சொல்லாமல் நாங்கள் வீட்டுக்கும் போகக்கூடாது. அப்படி போய்விட்டால் மறுநாள் நடிப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாரு' என கூறியிருக்கின்றனர். செய்யாறு பாலு பகிர்ந்திருக்கும் இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலர், என்ன வடிவேலு இவ்வளவு மோசமாக நடந்திருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











