Rajinikanth - பொற்காசுகள் முடிப்பு முதல் 5 ரூபாய் அட்வான்ஸ்வரை.. பணத்துக்கு ஆசைப்படுபவரா ரஜினிகாந்த்?
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் தனக்கு வந்த பொற்காசு முடிப்பை என்ன செய்தார் என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம், கறுப்பு நிறத்தவர் என பல கேலிகளையும், பல போராட்டங்களையும் சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

கோழி முட்டை போடலை: உதாரணமாக, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி அந்த புரொடக்ஷன் யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லேட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதேபோல் ஒரு படத்தில் பணியாற்றும்போது சம்பளம் கேட்டதற்காக அங்கிருந்து வெளியேற்றவும் பட்டிருக்கிறார்.
வெற்றி: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார்.
பணம் மீது ஆசை?: ரஜினி மீது எப்போதுமே ஒரு தரப்பினர் வைக்கும் குற்றச்சாட்டு என்பது அவர் பணத்தின் மீது ஆசை கொண்டவர். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதில் எப்போதும் கவனமாக இருப்பார் என்பதுதான். அதனை ரஜினி ரசிகர்கள் தீவிரமாக மறுத்துவந்தாலும் அந்தக் குற்றச்சாட்டு இன்றுவரை நீண்டுகொண்டுதான் செல்கிறது. இந்தச் சூழலில் அவர் தனக்கு வந்ததை தானமாக கொடுத்த தகவல் தெரியவந்திருக்கிறது.
உழைப்பாளி: அதாவது விஜயா வாகினி நாகி ரெட்டி ரஜினியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இயக்குநராக பி.வாசு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். படத்துக்கு பெயர் மட்டும் யாருக்குமே பிடிபடவில்லை. ஒருநாள் இரவு 12 மணிக்கு ரஜினிக்கு ஃபோன் செய்த பி.வாசு,சார் படத்துக்கு உழைப்பாளி என்று பெயர் யோசித்திருப்பதாக கூறியிருக்கிறார். அதை கேட்டு ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த் செம பெயர் சார். இதை எப்படி எம்ஜிஆர் விட்டார்னு தெரியல என வியந்திருக்கிறார்.

பொற்காசு முடிப்பு: இதனையடுத்து படத்தின் பூஜையும் போடப்பட்டிருக்கிறது. அப்போது நாகி ரெட்டி ஒரிஜினல் தங்க காசுகளை ஒரு முடிப்பு பையில் போட்டு ரஜினியிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அதை ரஜினிகாந்த் வாங்க மறுத்திருக்கிறார். இருப்பினும் நாகி ரெட்டியின் வற்புறுத்தலின் பேரில் அதை வாங்கியவர் உடனடியாக அதை பிரித்து அங்கிருந்தவர்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டாராம்.
5 ரூபாய் அட்வான்ஸ்: அதேபோல் பாரதிராஜா கொடி பறக்குது என்ற படத்தை இயக்க திட்டமிட்டு ரஜினியை ஹீரோவாக புக் செய்திருக்கிறார். அப்போது ரஜினி ஓரளவு வளர்ந்துவிட்ட சமயம். எனவே எவ்வளவு அட்வான்ஸாக வேண்டும் என பாரதிராஜா கேட்க உங்கள் கையால் ஐந்து ரூபாய் கொடுங்கள் போதும் என்று கேட்டு அதை பெற்றுக்கொண்டாராம். இப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றனவாம். இந்தத் தகவல்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











