Ilayaraaja - அறுவை சிகிச்சை முடிந்த கையோடு போட்ட ட்யூன்.. இளையராஜா செய்த மேஜிக்
சென்னை: Ilayaraaja (இளையராஜா) இன்றும் பலரது ஃபேவரைட்டான ஒரு காதல் பாடலுக்கான ட்யூனை இளையராஜா அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு படுக்கையில் இருந்தபடி அமைத்தது தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் இசையை மாற்றியவர்களில் முதன்மையானவர் இளையராஜா. மேடை நாடகங்களுக்கு தனது சகோதரர்களுடன் இசையமைத்துக்கொண்டிருந்த இளையராஜா அன்னக்கிளி படம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1975ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டாகின. இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தின் இசையை கேட்டபிறகுதான் வரப்பில் இருப்பவரின் வாயும் பாடலுக்காக திறந்தது.

படு பிஸியான இளையராஜா: அன்னகிளி பாடல்களின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளையராஜா தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருமாறினார். ஒரு நாளில் பத்து படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு படு பிஸியாக இருந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த பத்து பட பாடல்களும் புதுமையாகவும், ரசிகர்களை கவரும்படியும் அமைந்ததுதான். அந்த அளவுக்கு இளையராஜா தனது உயிரை கொடுத்து உழைத்தார்.
தவம் இருந்த இயக்குநர்கள்: இளையராஜாவின் இசை இருந்தால்போதும் தங்களுடைய படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற எண்ணமே அப்போதைய இயக்குநர்களுக்கு இருந்தது. இளையராஜாவுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்தாலும் இதுவரை எந்த இயக்குநருக்கும் இளையராஜா இசை இருந்தால் ஹிட் என்ற நம்பிக்கை வேறு இசையமைப்பாளர் மீது இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையை வாங்குவதற்காக விடியும் முன்னரே அவரது ஸ்டூடியோவுக்கு இயக்குநர்கள் படை எடுத்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.
வற்றாத இசை நதி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா கடைசியாக மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜிக்கு மூன்று கதைகளுக்கு இசையமைத்தார். அந்த ஆந்தாலாஜிக்கு அவர் அமைத்த இசை இப்போதைய 2K கிட்ஸுகளுக்கும் பிடித்துப்போயிருப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம் இளையராஜா எப்போதுமே வற்றாத இசை நதி என்று. அப்படிப்பட்ட இளையராஜா தனக்கான அறுவை சிகிச்சையை முடித்துக்கொண்டு படுக்கையில் இருந்தபடி ஒரு காதல் பாடலுக்கான ட்யூனை அமைத்திருக்கிறார்.
தம்பிக்கு எந்த ஊரு: ரஜினிகாந்த் நடிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான படம் தம்பிக்கு எந்த ஊரு. அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தைவிட படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தக்கூடியவை. அந்தப் பாடல்களில் ஒன்றுதான் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே நெஞ்சில் பாடல். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் மனதுக்குள் ஒருவித அமைதி குடிகொள்ளும்.

அறுவை சிகிச்சை: அந்தப் படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இரண்டு பாடல்கள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சமயத்தில் இளையராஜாவுக்கு சிறிய அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இந்த சூழலில் இளையராஜாவால் இசையமைக்க முடியுமா என்ற தயக்கத்தோடோ பாடல்கள் பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். உடனே யோசிக்காத இளையராஜா, 'அவ்வளவுதானே பாட்டு ட்யூன் தருகிறேன் என்று சொல்லி அந்தப் பாடலுக்கான ட்யூனை விசில் அடித்தபடியே சொல்லி ரெக்கார்ட் செய்து அனுப்பியிருக்கிறார்.
ஃபோனில் திருத்தம்: பாடலை பாட எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வந்திருக்கிறார். ஆனால் இளையராஜாவால் பாடல் பதிவுக்கு செல்ல முடியவில்லை. அதனையடுத்து பாலசுப்ரமணியம் பாடுவதை தொலைபேசியிலேயே கேட்டு வேண்டிய திருத்தங்களை சொன்னாராம் இளையராஜா. அதன் பிறகு பாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி படுத்த படுக்கையாக இருந்து உருவாக்கிய காதலின் தீபம் பாடல்தான் பல வருடங்கள் கழித்தும் அணையாமல் இருக்கிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











