Kalaignar 100 - அண்ணாவை சீண்டிய எம்.ஆர்.ராதா.. பட்டம் தந்தவரையே ஆட்டம் காண வைத்த கலைஞர் கருணாநிதி
சென்னை: Kalaignar Karunanidhi (கலைஞர் கருணாநிதி) கலைஞர் கருணாநிதி மேடை நாடகம் ஒன்றில் எம்.ஆர்.ராதாவுக்கு சமயோஜிதமாக பதிலடி கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் இதோ
கலைஞர் கருணாநிதி இந்திய அளவில் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தார் என்பது அனைவருமே அறிந்ததுதான். ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து பல திட்டங்களை செயல்படுத்தி சமூக நீதியை காத்தவர் என்ற பெயரையும் அவர் எடுத்திருக்கிறார். அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் கதையாசிரியர், வசனகர்த்தா, கவிஞர் என பல திறமைகளை தன் பேனா மூலம் எளிதாக காட்டியவர்.
நாடகம் டூ கோட்டை: தமிழ்நாடு எப்போதுமே கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மாநிலம். கலையும் கலைஞர்களும் மக்களிடையே ஒன்றிணைந்து போனதால்தான் இந்த மாநிலத்தை சினிமாவை சேர்ந்தவர்களே ஆள ஆரம்பித்தனர். கருணாநிதியும் நாடகம் டூ சினிமா டூ செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பாதையில் வந்தவர்தான். ஆனால் நடிகராக இல்லாமல் ஒரு எழுத்தாளராக இருந்துகொண்டு கோட்டையை பிடித்ததுதான் ஆச்சரியம்.
பராசக்தி: ஒருபக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஆச்சரியப்படுவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. ஏனெனில் கருணாநிதியின் எழுத்துக்கள் அப்போதைய காலகட்டத்தில் அரிதிலும் அரிதான அதிசயம். ஆம் அப்படித்தான் பராசக்தியை பார்த்தார்கள். அதில் அவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் இன்றுவரை தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. பராசக்தி படத்துக்கு தமிழ் சினிமாவின் முகமும் மாறியது.
கண்ணாடி போட்ட வள்ளுவர்: மணிரத்னம் இப்போது ஒன்றிரண்டு வார்த்தைகளை கொண்டு வசனம் எழுதுகிறார் என்று பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் அதை கலைஞர் கருணாநிதி எப்போதோ செய்துமுடித்துவிட்டார். உதாரணமாக, மலைக்கள்ளன் படத்தில் கதாநாயகியை பார்க்க நடு இரவில் கதாநாயகன் வர உரையாடல் ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் கதாநாயகன் வரவா என கேட்க கதாநாயகியோ எங்கே என்று பதற்றத்தோடு கேட்பார். உடனே கதாநாயகன், உன் அருகே என்று சொல்லும் வசனம் வரும். இந்த வசனத்தை கேட்கும்போது புரிந்துகொள்ளலாம் கலைஞர் கருணாநிதியின் மூளை எவ்வளவு விளையாடியிருக்கிறது என்று.

நாடகம்தான் விதை: சிறு வயதிலேயே கையெழுத்து பத்திரிகை நடத்திக்கொண்டிருந்தவர் நாடகத்தில் இணைய வேண்டும் என்ற ஆசையில் சேலத்துக்கு சென்றார். அப்போது புகழின் உச்சத்தில் இருந்த சேலம் மாடர்ன் டாக்கீஸில் இணைந்து நாடகங்களை போட ஆரம்பித்தார். அவரது எழுத்தில் உருவான ஒவ்வொரு நாடகமும் ஏகத்துக்கும் வரவேற்பைப் பெற்றது. இப்படிப்பட்ட சூழலில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவிடம் அறிமுகமாகி அவருடன் இணைந்து பல நாடகங்கள் போட்டார்.
பதிலடி கொடுத்த கலைஞர்: கருணாநிதி நாடகம் போட்டது மட்டுமின்றி அதில் நடிக்கவும் செய்தார். அப்படி ஒரு சமயம் எம்.ஆர்.ராதாவுடன் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி. பெரியாருக்கும், அண்ணாவுக்கும் சிறு உரசல் ஆரம்பித்திருந்த சமயம் அது. எம்.ஆர்.ராதாவோ பெரியாரின் வெறித்தனமான சீடன். கருணாநிதியோ அண்ணாவின் தம்பிகளில் ஒருவர். பெரியாருடன் அண்ணாவுக்கு இருந்த உரசலை குத்திக்காட்டும் விதமாக, அந்த நாடகத்தில் தீடிரென எம்.ஆர்.ராதா, 'தளபதி தளபதி என்கிறீர்களே உங்கள் தளபதி எத்தனை போர்க்களத்துக்கு சென்று வந்திருக்கிறார்' என கேட்டுவிட்டார் (அண்ணாவை தளபதி என அழைப்பது வழக்கம்).
சுதாரித்த கலைஞர்: நாடகத்தில் அப்படிப்பட்ட வசனம் எழுதப்படவில்லை. அண்ணாவை சீண்டுவதற்காகத்தான் ராதா இப்படி இல்லாத வசனத்தை கேள்வியாக கேட்கிறார் என்று புரிந்துகொண்ட கருணாநிதி, யோசிக்காமல் சட்டென்று, 'உறைக்குள் இருந்தாலும் அதற்கு பெயர் வாள்தான். போர்க்களத்துக்கு செல்லாவிட்டாலும் அவர் எப்போதுமே தளபதிதான்' என ஒரே போடாக போட்டார்.
இதனைப் பார்த்து எம்.ஆர்.ராதாவே ஆச்சரியப்பட்டுப்போய்விட்டார். இதற்கிடையே கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டம் கொடுத்ததும் எம்.ஆர்.ராதாதான் என்பது நினைவுகூரத்தக்கது. இப்படி பல சமயங்களில் தன்னுடைய சமயோஜிதத்தால் பலருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் கருணாநிதி. இன்று அவருக்கு 100ஆவது பிறந்தநாள்.


Click it and Unblock the Notifications











