அட இது வேறயா?.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டிய கமல் ஹாசன்.. எப்படி மிஸ் ஆச்சு தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த பல வருடங்களாக இணைந்து நடிக்காமல் இருக்கும் அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் சில காரணங்களால் அதில் கமல் ஹாசனால் நடிக்க முடியவில்லை. இதற்கிடையே ரஜினி இப்போது வேட்டையன் படத்திலும், கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.
கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் நடிகர்கள் ரஜினியும், கமல் ஹாசனும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர். ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். கமல் ஹாசன் மீது எப்போதும் தீராத நட்பு கொண்ட ரஜினிகாந்த்தும் அதை ஆமோதித்து தனியாக நடிக்க ஆரம்பித்தார்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தாலும் ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை என நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் அவர் தனது திறமையையும் நிரூபித்தவர்.
உலக நாயகன் கமல் ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல் ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.
பத்திரிகையாளர்களிடம் ரஜினி: ரஜினிகாந்த் தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை அப்படியே கொட்டிவிடும் பழக்கமுடையவர். தனது திருமணம் குறித்த விஷயத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என பேசியது என்று அந்தப் பட்டியல் மிக நீளம். தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக அவர் பேசியதும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பில் சில சர்ச்சைகள் இருந்தாலும் மேடை பேச்சில் ஒரு சாமானியத்தனம் இருப்பதாக ரசிகர்கள் கூறுவதுண்டு.
கமல் ஹாசனின் யோசிக்க வைக்கும் பேச்சு: ஆனால் கமல் ஹாசனின் பத்திரிகையாளர் சந்திப்போ, மேடை பேச்சோ நேர்மாறானது. அவரது படங்கள் போலவே பேச்சும் புரிவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் உண்டு. அதேசமயம் பேச்சை புரிந்துகொண்டால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என்றும் சிலர் கூறுவார்கள். இப்போது ரஜினிகாந்த் வேட்டையன் படத்திலும், கமல் ஹாசன் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.
நடிக்க மறுத்த கமல்: சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை கமல் ஹாசன் தவறவிட்டிருக்கிறார். அதாவது ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அந்த கேரக்டரில் முதலில் கமல் ஹாசனைத்தான் நடிக்க வைக்க திட்டமிட்டாராம் ஷங்கர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்ததாம். ஆனால் அப்போது கமல் ஹாசன் அரசியல், சினிமா என படு பிஸியாக இருந்ததன் காரணமாக நடிக்கவில்லையாம். இதனை ஷங்கர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











