இது என்னுடைய அல்ப ஆசை.. விஜய்யிடம் தனியாக சொன்னால் அவ்வளவுதான்.. மனம் திறந்த கமல்ஹாசன்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பாரா இல்லையா என்பது குறித்தும் இன்னும் தெளிவாக தெரியவில்லை. அனைத்துக்கும் இன்று நான்கு மணிக்கு முடிவு தெரிந்துவிடும் என்று தெரிகிறது. விசிக தன் நிலைப்பாட்டினை அப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போகிறது. இதனால் என்ன நடக்கும் என்ற உச்சக்கட்ட பதற்றத்தோடு கூடிய க்ளைமேக்ஸை நோக்கி தமிழ்நாடு அரசியல் களம் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் குறித்து கமல் பேசியிருக்கும் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்புக்கு இப்போது பஞ்சம் இல்லை. எங்கு திரும்பினாலும், எதை கேட்டாலும், எந்த சேனலுக்கு சென்றாலும் சோஷியல் மீடியாவில் எல்லோரின் டைம் லைனும் அரசியல் குறித்ததாகத்தான் இருக்கிறது. விஜய் ஆட்சியமைக்க எந்தவித இடையூறும் திமுக தரப்பிலிருந்து செய்யப்படாது என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறிவிட்டார். ஆனால் ஆட்சியமைக்க இழுபறி செய்வதே திமுக தரப்புதான் என்று வழக்கம்போல் தவெகவினர் கூற தொடங்கிவிட்டார்கள்.

தவெகவுக்கு வந்த ஆதரவு: ஆனால் திமுக கூட்டணியிலிருந்து கழன்றுகொண்டு காங்கிரஸ் முதல் ஆளாக சென்று ஆதரவு தெரிவித்தது. இதனால் 113 என தவெக பலம் பெற்றது. அதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிகவின் ஆதரவையும் எதிர்பார்த்தது தவெக. அவற்றில் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அதேசமயம் திமுக கூட்டணியில்தான் தொடர்வோம் என்றும் சொல்லிவிட்டார்கள். அதன் காரணமாக திமுக தயவில்தான் இத்தனை ஆதரவுகள் தவெகவுக்கு கிடைத்திருப்பதாக திமுகவினர் வாள் சுழற்ற; திமுக Vs தவெக என சோஷியல் மீடியா இருந்தது.
அமமுகவின் ட்விஸ்ட்: இது ஒருபக்கம் இருக்க அமமுக எம்.எல்.ஏ காமராஜை தவெகவினர் குதிரை பேரம் செய்து வாங்க முயற்சித்ததாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் புகாரும் கொடுத்திருக்கிறார். இன்னமும் விசிகவின் ஆதரவு கிடைக்கவில்லை. காலையிலேயே திருமாவளவன் தன் கட்சியின் முடிவு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மாலை நான்கு மணிக்கு உறுதியாக அறிவிப்போம் என கூறியிருக்கிறார். எனவே கடந்த ஐந்து நாட்களாக நடந்த பரபரப்புகள் எல்லாம் இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் கமல் பேட்டி: இதற்கிடையே தவெகவை ஆட்சியமைக்க அழைக்காததற்கு விஜய்யை எதிர்த்தவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசனும் ஆளுநரை கண்டித்தார்கள். இந்நிலையில் விஜய் குறித்து கடந்த 2017ஆம் ஆண்டு கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "விஜய் அரசியலில் எந்தப் பக்கத்தை தேர்வு செய்யப்போகிறார் என்பது முக்கியம். அவர் எனக்கு ஒத்த கருத்தோடு இருப்பார் என்றால் சந்தோஷமாக தோள் கொடுப்போம்.
இதுதான் என் ஆசை: விஜய்யின் படங்களை மட்டுமில்லை அவரையே நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அவரது படங்களில் எது பிடிக்கும் என்று கேட்பார்கள். ரஜினி படங்களில் முள்ளும் மலரும் பிடிக்கும். அது மாதிரி விஜய்யாலும் நடிக்க வேண்டும். இது என் அல்ப ஆசைதான். இதை அவரை தனியாக அழைத்து சொன்னால் சரி என்று தலையாட்டிவிட்டு செய்யாமல் போய்விடுவார். ஊடகத்தின் வாயிலாக சொன்னால் அவர் அதை செய்வார் என்று நினைக்கிறேன். அவர் நல்ல படங்கள் செய்ய வேண்டும். பாலிவுட்டில் ஷாருக்கான், அமீர் கான், அமிதாப் ஆகியோர் எல்லாம் அதைத்தான் செய்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
