Kamal Vadivelu: "வடிவேலு இனி என்கிட்ட வரமாட்டார்..” அப்பவே உறுதியாக சரியாக சொன்ன கமல்!
சென்னை: வைகைப்புயல் என ரசிகர்களால் அழைக்கப்படும் வடிவேலு, மாமன்னன் படத்தில் இருந்து தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
ராகவா லாரன்ஸுடன் அவர் நடித்துள்ள சந்திரமுகி 2 வரும் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தேவர் மகன் படத்துக்குப் பின்னர் வடிவேலுவுக்கு நான் தேவைப்பட மாட்டேன் என கமல் கூறியுள்ளார்.
இதுகுறித்து வடிவேலுவே ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

வடிவேலுவை சரியாக கணித்த கமல்ஹாசன்: ராஜ்கிரண் மூலம் சினிமாவில் அறிமுகமான வடிவேலு, ஆரம்ப காலங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே நடித்து வந்தார். தேவர் மகன் படத்துக்குப் பின்னர் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. இந்தப் படத்தில் வடிவேலுவின் இசக்கி கேரக்டர், சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம் வரை பிரதிபலித்தது.
நாகேஷ், டிஎஸ் பாலைய்யா ஆகியோருக்குப் பிறகு தமிழில் தனித்துவமான காமெடி நடிகராக தன்னை உருமாற்றிக் கொண்டார் வடிவேலு. தனது உடல் மொழியிலேயே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவர். ஃபீல்ட் அவுட், ரெட் கார்டு என சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோதும், மீம் கன்டெண்ட்டின் நாயகனாக மாஸ் காட்டினார் வடிவேலு.
இந்நிலையில் பழைய சர்ச்சைகளில் இருந்து வெளிவந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், அடுத்து வெளியான மாமன்னன் வடிவேலுவை கொண்டாட வைத்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, ஃபஹத் பாசில் ஆகியோருடன் லீடிங் கேரக்டரில் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தினார் வடிவேலு.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட, வடிவேலு குறித்து கமல் மிக உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்த வடிவேலு, "கமல் சாரை சாகற வரைக்கும் மறக்க மாட்டேன். அவர் ஒரு தீர்க்கதரிசி. அவருக்கு சாமி பிடிக்குதோ இல்லையோ சாமிக்கு அவர ரொம்ப பிடிக்கும்" என மிக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது அவர்தான் தனது கேரியரை சரியாக கணித்தார் என வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.
தேவர் மகன் படத்தில் வடிவேலுவை கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்த கமல், அவரது நடிப்பை பார்த்துவிட்டு மனம் விட்டு பாராட்டினாராம். மேலும், இனி வடிவேலுவுக்கு நான் தேவைப்பட மாட்டேன், அவரும் என்னை தேடி வரமாட்டார். வடிவேலு தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பார் என அனைவர் முன்னிலையிலும் பாராட்டியுள்ளார் கமல். இதனை குறிப்பிட்டுள்ள வடிவேலு, கமல் சாரின் வாக்குதான் பலித்து விட்டது எனக் கூறியுள்ளார். வடிவேலுவின் இந்த பேட்டியை கமல் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











