Kannadasan - குடிக்கான பெர்மிட்டை திருப்பி கொடு.. ஆர்டர் போட்ட காமராஜரை அலறவிட்ட கண்ணதாசன்
சென்னை: Kannadasan (கண்ணதாசன்) மதுவிலக்கு காலத்தில் குடிக்கான பெர்மிட் வைத்திருந்த கண்ணதாசனிடம் பெர்மிட்டை திருப்பி கொடு என காமராஜர் கேட்டதற்கு கண்ணதாசன் அளித்த தக் பதில் இதோ
கண்ணதாசன் தவிர்க்கவே முடியாத பாடலாசிரியர். பல்லாயிரம் பாடல்கள் எழுதியிருக்கும் அவர்தான் பாடலாசிரியர்களுக்கு ரோல் மாடல். தனது வாழ்க்கையிலிருந்து வார்த்தைகளை எடுத்து அதை பாடலாக்கி கொடுத்ததன் காரணமாக அவர் இறந்தும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு பாடலாசிரியருக்குமான கனவு என்பது கண்ணதாசன் போல் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் என்பதுதான்.

லேசான காரியமில்லை: அவரைப் போல் எழுதிவிட வேண்டும் என ஆசைப்பட்டவர்களுக்கும், ஆசைப்படுபவர்களுக்கும் தெரியும் அவர்போல் எழுதுவது லேசான காரியமில்லை இல்லை என்று. ஏனென்றால் கண்ணதாசன் பெற்ற அனுபவத்தில் நூறில் பத்து சதவீதம்கூட மற்றவர்கள் பெற்றிருக்கமாட்டார்கள். அவர் அவ்வளவு அனுபவங்களை பெற்றிருக்கிறார்.
அண்ணன் என்னடா தம்பி என்னடா?: தான் அவமானப்பட்டாலும் சரி, அங்கீகரிக்கப்பட்டாலும் சரி அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் மனதில் ஏற்றிக்கொண்டு தன்னுடைய பாடல்களில் வைத்தவர். பணத்தை வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்ன அண்ணனை வைத்துதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று எழுதினார். அந்த சூழலில் வேறு யாராக இருந்தாலும், ஐயோ அண்ணன் இப்படி பண்ணிவிட்டாரே என தேம்பி அந்த சோகத்திலேயே தேங்கித்தான் இருந்திருப்பார்கள்.
அரசியலில் கண்ணதாசன்: கண்ணதாசன் பாடலில் எப்படி கவனம் செலுத்தினாரோ அதேபோல்தான் அரசியலிலும் கவனம் செலுத்தினார். திராவிட பற்றாளராக இருந்து பிறகு காங்கிரஸுக்கு மாறியவர். காமராஜருக்கு தூது விடும்படிதான், சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாடலை எழுதினார். இந்தச் சூழலில் காமராஜரை தன்னுடைய பதிலால் கண்ணதாசன் அலறவிட்ட சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் கண்ணதாசன் காங்கிரஸில் இருந்திருக்கிறார். மது பழக்கம் உடைய கண்ணதாசன் அப்போதைய அமைச்சர் கக்கனிடம் சென்று, நான் மது குடிப்பதற்கு பெர்மிட் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவரது பேச்சை மறுதலிக்க முடியாத கக்கனும் அதற்கான பெர்மிட்டை கொடுத்திருக்கிறார்.
தக் பதில்: கண்ணதாசனும் பெர்மிட்டை வாங்கி வைத்துக்கொண்டு மதுவை குடித்திருக்கிறார். ஆனால் இது பூதாகரமாக வெடித்தது. அது எப்படி மதுவிலக்கு உள்ள மாநிலத்தில் கண்ணதாசன் மட்டும் குடிக்கலாம். காங்கிரஸ் கட்சிக்காரர் என்பதால் அவருக்கு மட்டும் அரசு பெர்மிட் கொடுத்திருக்கிறது என பலர் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த விஷயம் டெல்லிவரைக்கும் சென்றுவிட்டது. அதனையடுத்து டெல்லியிலிருந்து காமராஜருக்கு ப்ரெஷர் போடப்பட்டிருக்கிறது.
இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்த காமராஜர் கண்ணதாசனிடம் குடிக்காக கொடுத்திருந்த பெர்மிட்டை திருப்பி கொடு என கேட்டிருக்கிறார். அதற்கு கண்ணதாசன் சற்றும் யோசிக்காமல் சரி உங்களிடமே திருப்பி கொடுக்கிறேன். ஆனால் அந்த பெர்மிட்டை அல்ல காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கார்டை கொடுக்கிறேன் என ஒரே போடாக போட்டிருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத காமராஜர், சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி நீ போ நான் பார்த்துக்கிறேன் என கூறி அனுப்பியிருக்கிறார்.
காமராஜர் அப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது; திராவிட கட்சிகளின் வளர்ச்சியை எதிர்ப்பதில் கண்ணதாசனின் துணையையும் காமராஜர் எதிர்பார்த்தார். அதனால் அவருக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. இந்தத் தகவலை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











