உதயநிதிதான் பெரிய ஆளு.. தலைவா டைம்ல ஜெயலலிதா விஜய்யை உள்ளேகூட விடல.. ஓபனாக பேசிய நடிகர்
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான தளபதி 69ல் நடித்துவருகிறார். இந்தப் படத்தை எப்படியாவது ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்று மும்முரமாக உழைத்துவருகிறார்.இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் பயணித்துவருகிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகர் கருணாஸ் பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் அறிமுகமாகி ஏகப்பட்ட விமர்சனங்கள், கிண்டல்களை சந்தித்தவர் விஜய். அதற்கு பிறகு படிப்படியாக முன்னேறி தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை சினிமாவில் உருவாக்கினார். இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக நிற்கிறார். இந்தியா முழுவதும் அவருக்கென ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் தனது மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்த அவர்; கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ஆரூடம் கூறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம்: அந்த ஆரூடப்படி கடந்த வருடம் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி ஆரம்பித்ததும் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் திமுகவை கடுமையாக சாடினார். அதனைத் தொடர்ந்து எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் மறைமுகமாக ஆளுங்கட்சியான திமுகவை விமர்சனம் செய்தார். இதன் காரணமாக விஜய் Vs திமுக என்ற நிலை உருவாகியிருக்கிறது தமிழ்நாடு அரசியல் களத்தில்.
பாஜகவின் பி டீம்: திமுகவினரும் விஜய்யின் விமர்சனத்துக்கு தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். பாஜகவின் பி டீம்தான் விஜய் என்று விமர்சனத்தை முன்வைக்கும் அவர்கள்; பனையூரின் அலுவலகத்தில் இருந்துகொண்டு வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று விளாசுகிறார்கள். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பரந்தூர் சென்றார் விஜய். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கும் அவர் செல்லவிருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
எம்ஜிஆர் ஸ்டைல்: அதேசமயம் அவர் களத்துக்கு சென்றாலும் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக நடந்துகொள்ளவில்லை; சினிமா ஹீரோ போல்தான் இருக்கிறார் என்றும் விஜய்க்கு எதிர்தரப்பினர் கூறுகிறார்கள். முக்கியமாக பரந்தூருக்கு சென்ற அவர் என்னமோ சினிமாவில் பேசுவது போல் பேசினார்; சைகைகளை செய்தார். தனது மனதுக்குள் பெரிய எம்ஜிஆர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். பிரசார வாகனத்தைவிட்டு இறங்கக்கூட இல்லையே என்று ஓபனாகவே கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
கருணாஸ் பேட்டி: அதேபோல் உதயநிதியை ஒன்றும் இல்லாமல் ஆக்கத்தான் விஜய் களமிறங்கியிருக்கிறார் என்று தவெகவினரும் பதிலுக்கு கூறிவருகிறார்கள். இந்நிலையில் விஜய் மற்றும் உதயநிதி குறித்து கருணாஸ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விஜய் தலைவா படத்தில் நடித்தபோது டைம் டூ லீட் என்று படத்தின் பெயருக்கு கீழ் பேட்டதற்காக அந்தப் படத்தின் ரிலீஸுக்கு ஜெயலலிதா இடையூறாக இருந்தார்.
உதயநிதிதான் பெரிய ஆள்: உடனே விஜய் என்ன செய்தார். கொடநாடுக்கு சென்றார். ஆனால் அங்கு அவரை ஜெயலலிதா உள்ளேகூட விடவில்லையே. நடிகர் என்று எடுத்துக்கொண்டால் உதயநிதி சின்ன நடிகர் விஜய்தான் பெரிய நடிகர். அதேசமயம் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக விஜய்யைவிட உதயநிதிதான் பெரிய ஆள். ஏனெனில் பாரம்பரியமாகவே அவர் அரசியல் குடும்பத்திலிருந்து வருகிறார். அரசியல் என்பது அவருக்குள்ளேயே ஊறியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











