இதெல்லாம் ஒரு பாட்டா நல்லாவே இல்ல.. ரஜினியிடம் ஓபனாக கூறிய குஷ்பூ.. சில்லறைகளை சிதறவிட்ட ரசிகர்கள்
சென்னை: ரஜினிகாந்த்திடம் நடிகை குஷ்பூ ஒரு பாடலை குறிப்பிட்டு இதெல்லாம் ஒரு பாட்டா சார் நல்லாவே இல்லை என கூறியிருக்கிறார்.
தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தமிழை முறையாக கற்றுக்கொண்ட குஷ்பூ
மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ்நாட்டில் குஷ்பூ இட்லி எனும் அளவுக்கு சென்சேஷனல் ஆனவர்.

குஷ்பூ கொடுத்த தொடர் ஹிட் படங்கள்
இப்போது அரசியல்வாதியாக இருந்தாலும் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா, சிங்காரவேலன் என மெகா ஹிட்டுகளையும், ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ப்ளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.

ஒரே வருடத்தில் 10 படங்கள்
90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

ரஜினியுடன் இணைந்த அண்ணாமலை
1992ஆம் ஆண்டு குஷ்பூ நடித்து மெகா ஹிட்டான படங்களில் அண்ணாமலை குறிப்பிடத்தக்க ஒன்று. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அந்தப் படம் ரஜினிகாந்த்தின் கேரியரிலும் முக்கியமான படங்களில் ஒன்று. ரஜினியை காதலிக்கும்போது குறும்புத்தனமாக பெண், திருமணம் ஆகி மனைவி ஆன பிறகு பக்குவமான பெண் என தனது நடிப்பில் வெரைட்டி காண்பித்திருப்பார் குஷ்பூ.

கொண்டையில் தாழம் பூ பாடல்
அண்ணாமலை படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே இன்றுவரை எல்லோராலும் கேட்கப்படுவது. குறிப்பாக கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப் பூ கூடையில் என்ன பூ குஷ்பூ பாடல் மிகவும் பிரபலம். குஷ்பூவின் பெயர் வரும்படி வைரமுத்து அந்தப் பாடலை எழுதியிருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

இதெல்லாம் ஒரு பாட்டா சார்; ரஜினியிடம் சொன்ன குஷ்பூ
அண்ணாமலை ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, ‘அண்ணாமல அண்ணாமல' பாடலும், ‘கொண்டையில் தாழம் பூ' பாடலும் ரெக்கார்ட் ஆகி வந்திருக்கின்றன. முதலில் அண்ணாமல அண்ணாமல பாடலை கேட்ட குஷ்பூ இந்தப் பாடல் நல்லா இருக்கு சார் என கூறியிருக்கிறார். அதனையடுத்து கொண்டையில் தாழம் பூ பாடலை கேட்ட அவர், ரஜினியிடம் என்ன சார் இது பாட்டு. வரிகள் எல்லாம் இப்படி இருக்கு. இதைவிட அண்ணாமல அண்ணாமல பாடல்தான் சார் நல்லா இருக்கு என கூறினாராம்.

குஷ்பூவுக்கு பதில் கொடுத்த ரஜினிகாந்த்
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'அண்ணாமல அண்ணாமல' பாடல் நல்லாத்தான் இருக்கு. ஆனா கொண்டையில் தாழம் பூ பாடலுக்கு தியேட்டரில் கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார் என்று கூறினாராம். படம் ரிலீஸான பிறகு கமலா தியேட்டரில் அண்ணாமலை படத்தை பார்த்திருக்கிறார் குஷ்பூ. அப்போது இந்தப் பாடல் வந்தபோது ரசிகர்கள் அனைவரும், 'கொண்டையில் தாழம் பூ நெஞ்சிலே வாழைப் பூ கூடையில் என்ன பூ" என்ற கேப் விழுந்த சமயத்தில் , குஷ்பூ என்று கத்தியபடி திரையில் சில்லறைகளை சிதறவிட்டு ஆரவாரம் செய்தனராம். இதைப் பார்த்த குஷ்பூ பயந்தபடி படத்திலிருந்து பாதியிலேயே வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இந்தத் தகவலை அவர் சமீபத்திலளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











