அஜித் உனக்கு மட்டும் எங்கிருந்துப்பா இவ்வளவு கூட்டம் வருது.. டிரெண்டாகும் குஷ்புவின் பழைய ட்வீட்!
சென்னை: தீபாவளி என்றாலே சினிமா ரசிகர்களுக்கு இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபது விஜய் என இவர்களின் படங்களையே அதிகம் பார்த்து பழக்கப்பட்டு விட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த பெரிய ஸ்டார்கள் தீபாவளிக்கு பெரிய அளவில் படங்களை ரிலீஸ் செய்வது இல்லை. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்கள் தீபாவளிக்கு படங்களை ரிலீஸ் செய்து வளர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, நடிகை குஷ்பு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அஜித்தின் வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியான போது பகிர்ந்த ட்வீட் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு ஆண்டில் எந்த தேதியில் படம் வெளியாகிறதோ இல்லையோ, தீபாவளியில் கட்டாயம் படம் வெளியாக வேண்டும். தீபாவளி தினத்திற்கு முதல் நாளே தியேட்டர் வாசலில் படத்திற்கான பேனர்கள் கட்டி, தியேட்டர் முழுவதும் தோரணங்கள் கட்டி, காலை 6 மணிக்கு காட்சி என்றால், முடிந்தால் விடிய விடியவே தியேட்டர் வாசலில் தாரை தப்பட்டைகள் வைத்தோ, பேண்ட் வாத்தியங்கள் வைத்தோ ஆட்டம், இல்லையென்றால் அதிகாலை 3 மணி முதல் ஆட்டம் பாட்டம் என மொத்த தியேட்டரையும் திருவிழா பூண்டுள்ள கோவிலாக மாற்றிவிடுவார்கள்.

தீபாவளி என்பதால் பல ரசிகர்களும் தியேட்டர் வாசலில் வெடி வெடிப்பார்கள். சில ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தியேட்டருக்குள்ளே பட்டாசுகளைக் கொண்டு சென்று வெடிப்பதையும் பார்த்துள்ளோம். இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியது தான். படத்தின் டைட்டில், அஜித் பெயர், அஜித் இண்ட்ரோ, அஜித்தின் இண்ட்ரோ பாடல், சண்டைக் காட்சிகள் என பல காட்சிகளில் ரசிகர்கள் பலரும் இருக்கையில் அமரவே மாட்டார்கள். ஸ்கீரினுக்கு அருகில் சென்று அஜித்தை அவர்கள் கொண்டாடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அஜித்த சொன்ன அறிவுரை: காரணம், இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் மற்ற உச்ச நடிகர்களுக்கு இருந்தாலும், அஜித் தனக்கு ரசிகர்கள் பட்டாளமே வேண்டாம், இவ்வளவு பெரிய கிராண்ட் ஓபனிங் வேண்டாம், குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள், நேரம் இருந்தால் படம் பிடித்தால் தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள் என்று கூறினார். அப்படிச் சொன்ன பின்னரும் ரசிகர்கள் அஜித்தை இந்த அளவுக்கு கொண்டாடி வருகிறார்கள் என்றால், அது அஜித் மீது இருக்கும் அன்புதான்.
ஆச்சரியம்: அஜித் மீது ரசிகர்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் குஷ்புவின் பழைய ட்வீட். அதாவது கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு அஜித் நடிப்பில் வெளியான படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இது மட்டும் இல்லாமல், படத்தில் அஜித்தின் தங்கையாக நித்யா மேனன் நடித்திருந்தார். படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

குஷ்புவின் போஸ்ட்: வேதாளம் படத்தின் மாஸ் ஓபனிங்கைப் பார்த்துவிட்டு நடிகை குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், " தல உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம். வேதாளம் இந்த தீபாவளி பிளாக்பஸ்டர் ஹிட் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் தேடிப் பிடித்த ரசிகர்கள், மெய்யழகன் படத்தில் கார்த்தி பேசும் வசனமான, " அது எல்லாம் இறந்த காலமா... இல்லை.. கடந்த காலம், நாம் கடந்து வந்த பொற்காலம்" என்ற வசனத்தை சேர்த்து, வேதாளம் படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது, ரசிகர்கள் கொண்டாடிய வீடியோவை சேர்த்து பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அந்த வீடியோவுக்கு, அஜித் ரசிகர்களின் ஆகச்சிறந்த தீபாவளி. ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64 வது படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யுங்கள்" என்று கோரிக்கையும் வைத்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











