Maanagaram Shri: என்னை சுற்றி நடந்த பிரச்சனை.. சினிமாவே வேண்டாம்.. ஸ்ரீயின் பழைய பேட்டி!
சென்னை: இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் நடிகர் ஸ்ரீயை பற்றி செய்திகள் அதிகம் தென்படுகிறது. வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமான ஸ்ரீ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோம் பப்டி, வில் ஆம்பு, மாநகரம், இறுகபற்று என வெற்றிபெற்ற படத்தில் நடித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக நடிகர் ஸ்ரீ, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோவைப் பார்த்த பலர், ஸ்ரீக்கு என்ன ஆச்சு என கேட்டு வரும் நிலையில், அவரின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து தான், நான் சினிமாத்துறைக்கு நடிக்க வந்தேன். நான் விஸ்காம் படித்து இருக்கிறேன். இதனால், இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான், பாலாஜி சக்திவேல் சார் என்னை சந்தித்து என்னை ஆடிஷனுக்கு அழைத்தார். அதில், நான் செலக்டாகி வழக்கு எண் 18/9 என்ற படத்தில் நடித்தேன் . சினிமாவில் நடித்தே ஆகவேண்டும் என்ற வெறியெல்லாம் எனக்கு இல்லை. வாய்ப்பு வந்ததால் அந்த படத்தில் நடித்தேன். அதற்கு முன், ஈவன் மேனேஜ்மென்ட் மற்றும் ரேடியோ ஒன்று, ஆஹா எப்எம்பில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

நடிகர் ஸ்ரீ பேட்டி: வழக்கு எண் படம் வெளியானதுக்கு பிறகு, ஒரு மாதம் கழித்து எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தது. தனிப்பட்ட பிரச்சனைகள், அந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அந்த கதையை நான் மிஸ் செய்து விட்டேன். அந்தக் கதைக்குப் பிறகு கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கதைகளை நான் கேட்டு இருக்கிறேன். ஆனால், அந்த கதைகள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேண்டாம் என்றேன். ஆனால், அந்த கதைகள் எல்லாம், மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. அந்த கதையை கேட்டதும், எனக்கு, அந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா... சரியாக நடிப்பேனா... என்ற குழப்பத்தினால் அந்த படங்களில் நான் நடிக்கவில்லை.
மிஸ்கின் சாரின் முடிவு: பாலாஜி சக்திவேல் சார் மீது எனக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை இருந்ததோ, அதேபோல மிஸ்கின் சார் மீதும் எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருந்தது. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் இல்லை. மிஷ்கின் சார் தான் என்னை தேர்வு செய்தார். நான் இரண்டு படத்தினுடைய கதைகளை கையில் வைத்திருக்கிறேன். ஆனால், எந்த படத்தை முதலில் எடுப்பேன் என்று தெரியவில்லை. இரண்டு படத்தில் ஏதோ ஒரு படத்தில், நீ நிச்சயமாக நடிப்பாய் என்று என்னிடம் சொன்னார். அதன் பிறகு தான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கதையின் பவுண்டரி ஸ்கிரிப்டுகளை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார்.

நடிக்க வந்தேன்: படத்தின் கதையை படித்துவிட்டு நான் மிஷ்கின் சாரிடம், எனக்கு பயமாக இருக்கிறது இந்த கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிப்பேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினேன். அவர் உன்னால் முடியும் என்றார். நான் இன்னும் எத்தனை படத்தில் நடிக்கப் போகிறேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஓநாயும் ஆட்டுக்குட்டி படத்தில் நடித்த சந்துரு என்ற கதாபாத்திரம் போல ஒரு ரோல் கிடைப்பது மிகவும் கஷ்டம். தொடர்ந்து நல்ல நல்ல படத்தில், நல்ல கதாபாத்திரத்தில் உயிரை கொடுத்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு ஈக்குவளாக பயமும் இருக்கிறது என்று ஸ்ரீ அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.
ஆதாயம் தேட வேண்டாம்: இந்நிலையில், நடிகர் ஸ்ரீ யின் இந்த நிலைமையைப் பார்த்த அவரின் தோழி, அவனுக்கு நிறைய பேரோட சப்போர்ட், நிறைய அன்பு கிடைத்தது பார்த்து சந்தோஷமா இருந்தாலும், ஒரு சிலர் தவறான தகவல்களை பதிவிடுகிறார்கள். அவன் போதைக்கு அடிமையானவனோ, GAYயோ கிடையாது. ஒருவேளை அவன் GAYயாக இருந்தாலும், அது அவனுடைய தனிப்பட்ட விஷயம். ஸ்ரீயினுடைய மனநிலை தற்போது சரியில்லை. ஸ்ரீயால் தன்னை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை, ஸ்ரீயால் தன்னுடைய மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தான், அந்த மன அழுத்தத்திற்கு பல காரணம் இருக்கிறது. அவன் கடைசியாக நடித்த சில படத்திற்கும், செய்த வேலைக்கும் அவனுக்கு சம்பளம் தரப்படவில்லை. ஸ்ரீ இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறான். இதனால், தயவுசெய்து இந்த விஷயத்தை ஒரு பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் யாரும் ஆதாயம் தேட வேண்டாம் என்றார்.

மருத்துவ உதவி தேவை: ஸ்ரீ குறித்து பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன். ஸ்ரீ மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். எனக்குத் தெரிந்து அவருக்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை அப்படி யாராவது இருந்திருந்தால், இந்த அளவுக்கு அவரை விட்டு இருக்க மாட்டார்கள். ஸ்ரீ இப்படி ஒரு பிரச்சனைகள் இருக்கிறார் என்பது நடிகர் சங்கத்திற்கு நிச்சயமாக சென்று இருக்கும். இதனால், நடிகர் சங்கம் ஸ்ரீயின் விஷயத்தில் தலையெட்டு, முதலில் அவரை அந்த வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
வாழ்க்கையே மாறி போச்சு: அவரை வீடியோவில் பார்க்கும்போது தனியாகத்தான் சமைத்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். நண்பர்கள் இல்லாதவர்கள் இப்படித்தான் மனதளவில் பாதிப்படைவார்கள். நண்பர்கள் என்பது நம்முடைய மருந்து போன்றவர்கள், எவ்வளவு மன வலியோடு இருந்தாலும் ஒரு பத்து நண்பர்களோடு சேர்ந்து விட்டால் அந்த மன வலி மறைந்து விடும். ஆனால், நடிகர் ஸ்ரீயின் விஷயத்தில் என்ன நடந்தது... ஸ்ரீக்கு என்ன ஆனது.. என பல கேள்விகள் மனதிற்குள் எழுகிறது. ஸ்ரீ நடித்த இறுகபற்று படம் கடந்த ஆண்டு தான் வெளியானது. அந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுக்குள் அவரின் வாழ்க்கையே மொத்தமாக மாறிவிட்டதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதில் இருந்து அவர் மீண்டும் வர வேண்டும் என அந்தணன் அந்த பேட்டியில் வருத்தப்பட்டு பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











