Mankatha Throwback: மங்காத்தா படத்திற்கு இருந்த அரசியல் நெருக்கடி? அஜித்திற்காக கண் அசைத்த அன்றைய CM
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான படமான மங்காத்தா நாளை அதாவது ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகவுள்ளது. படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. படத்தை வெங்கட் பிரபு இயக்க கிளவுட் நயன் நிறுவனம் தயாரித்தது. இது அஜித்தின் 50 ஆவது படமாக வெளியானது. படம் நாளை ரீ ரிலீஸ் ஆகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் முன்பதிவு செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் மங்காத்தா படத்தின் ரிலீஸின் போது இருந்த அரசியல் நெருக்கடியும், அரசியல் சூழலும் மிகவும் முக்கியமானது.
அஜித்தின் 50வது படம் என்பதால் படத்தை மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டதாக அப்போது தகவல்கள் உலா வந்தது. காரணம் மே 1 அஜித்தின் பிறந்த நாள். படத்தில் அஜித்தும் கிளவுட் நயன் நிறுவனமும் கமிட் ஆகும் போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி செயலாற்றி வந்தார். 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்று, தமிழ்நாட்டின் ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏறியது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெ. ஜெயலலிதா பதவி ஏற்றார்.

அரசியல் நெருக்கடி?: இங்குதான் அரசியல் நெருக்கடி என்ற போர்வை சூழத் தொடங்கியது. அதாவது படத்தை தயாரித்த கிளவுட் நயன் நிறுவனமும் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் திமுகவுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனங்கள். இப்படி இருக்கையில் மங்காத்தா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தியேட்டர்கள் ஒதுக்குவதில் திரையரங்க உரிமையாளர்கள் சிலர் தயங்கியதாகவும் அப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா: இந்த நிலையை உணர்ந்து கொண்ட அஜித் அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவை சந்தித்து, மங்காத்தா தனது 50ஆவது படம் என்றும், இந்த படம் வெளியாக உங்களின் ஆதரவு தேவை என்றும் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சரி என முடிவெடுத்து படத்தை ரிலீஸ் செய்வதற்கு இருந்த எல்லா சவால்களையும் விலக்கிக் கொடுத்ததாகவும் பேச்சுக்கள் அப்போது பலமாகவே அடிபட்டது. இப்படியான நெருக்கடிகளுக்கு பின்னர் தான் படத்தை ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி படக்குழு ரிலீஸ் செய்து, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


Click it and Unblock the Notifications











