எஜமான் படத்தில் நடித்த போது மீனாவுக்கு வயசு என்னன்னு தெரியுமா..? ரஜினியே ஷாக்கான சம்பவம்!
சென்னை: குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான மீனா, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார்.
தனது கணவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள மீனா, திரையுலகில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார்.
இதனையடுத்து அவரை பெருமைப்படுத்தும் விதமாக மீனா 40 என்ற நிகழ்ச்சி கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மீனா, ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்த அனுபவத்தையும் அப்போது தனது வயது என்ன என்பதையும் மனம் திறந்துள்ளார்.

40 இயர்ஸ் ஆஃப் மீனா
நடிகர்களுக்கே சவால் விடும் வகையில், திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகை மீனா. தனது 6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, 1990 முதல் 2000 வரையிலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த மீனாவுக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கண்ணழகி மீனா என்றால் அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. இந்நிலையில், மீனா 40 என்ற நிகழ்ச்சி கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி
மீனா 40 நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராஜ்கிரண், போனி கபூர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நெஞ்சங்கள் என்ற படத்தில் சிவாஜியுடனும், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மீனா. முதலில் தெலுங்கில் ஹீரோயினாக என்ட்ரியான மீனாவுக்கு, தமிழில் ரஜ்கிரனுடன் நடித்த 'என் ராசாவின் மனசிலே' திரைப்படம் நல்ல அறிமுகம் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தான் ரஜினியின் எஜமான் படத்தில் அவருக்கு ஜோடியானார்.

மீனா வயது இவ்வளவு தானா?
'என் ராசாவின் மனசிலே' சோலையம்மாவாக கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட மீனாவுக்கு, எஜமான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆர்.வி உதயகுமார் இயக்கிய இந்தப் படம் 1993 பிப்ரவரியில் வெளியானது. முன்னதாக இந்தப் படத்திற்காக 1991ம் ஆண்டிலேயே மீனாவுக்கு ஆடிஷன் நடத்தப்பட்டதாம். அப்போது மீனாவுக்கு வயது 15 தான் என கேள்விப்பட்ட ரஜினி ஒருநிமிடம் ஆடிப் போய்விட்டாராம். தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, பத்தே வருடத்தில் அவருக்கு ஜோடியாக வந்ததால் கொஞ்சம் ஷாக்கிங் ஆகிவிட்டாராம்.

எஜமான் கொடுத்த ஹிட்
எஜமான் படத்தில் வைத்தீஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த மீனாவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். வில்லேஜ் கெட்டப்பில் ரஜினி - மீனா இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. எஜமான் படம் வெளியாகும் போது மீனாவின் வயது 16 தான், அதேநேரம் ரஜினியின் வயது 43. ஆனால், அந்த கேப் தெரியாதவாறு நல்ல முதிர்ச்சியாக நடித்திருப்பார் மீனா. இதனால், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்ததாம். அதுமட்டும் இல்லாமல் எஜமான் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

கோலிவுட் டாப் ஹீரோக்களின் நாயகி
எஜமான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ், பிரபுவுடன் ராஜகுமாரன், மீண்டும் ரஜினியுடன் வீரா, சரத்குமாருடன் நாட்டாமை என ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. ரஜினியுடன் முத்து படத்தில் நடித்த பிறகு மீனாவுக்கு ஜப்பான் நாட்டிலும் அதிகமான ரசிகர்கள் காணப்பட்டனர். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், அஜித், பார்த்திபன், முரளி, கார்த்திக், பிரபுதேவா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மீனா. தற்போது மலையாளத்தில் த்ரிஷ்யம், ப்ரோ டேடி, தமிழில் அண்ணாத்த படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











