கடனில் தத்தளித்த MGR.. உடனடியாக வந்த உதவி.. நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்ட MGR.. த்ரோபேக்!
சென்னை: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்க்கு இன்று 108வது பிறந்த நாள். எனவே அவரது ரசிகர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் தலைநகர் சென்னை, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்து வருகின்றனர். சினிமா, அதன் பின்னர் தமிழ்நாடு அரசியல் என, தான் கால் வைத்த இடங்களில் எல்லாம் கோலோச்சியவர் MGR. இவரது பொது வாழ்க்கையில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதில் ஒரு சம்பவம் குறித்து, இந்தத் தொகுப்பில் காணலாம்.
MGR மீது இருக்கும் அன்பிற்காகவே இன்றைக்கும் பலர் அவரது கட்சியான அதிமுகவிற்கு வாக்களித்து வருகின்றார்கள். MGR மொத்தம் 136 படங்களில் நடித்துள்ளார். இதில் 133 படங்கள் தமிழ் படங்கள், இரண்டு படங்கள் மலையாளத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இதில் இவர் இறந்த பின்னர், இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. 1936ஆம் ஆண்டில் இருந்து 1987ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் இருந்தார்.

மக்கள் திலகம் என அழைக்கப்பட்டவர் எம்.ஜி. ராமச்சந்திரன். சினிமா பிரபலமாக இருந்த இவர், தொடக்கத்தில் தீவிரமான காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தார். நடிகராக இருந்து வந்த MGR, திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்து வந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கும்போது, அதில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, கட்சியின் கொள்கைகளை படங்களில் இடம் பெறச் செய்வது என கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், கருணாநிதி ஆட்சி அமைக்க அவருக்குத் துணை நின்றார். அதன் பின்னர் சில காரணங்களால், MGR கட்சியில் இருந்து வெளியேறினார்.
அதிமுக: திமுகவில் இருந்து வெளியேறிய MGR, அதன் பின்னர், அண்ணா திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று, முதலமைச்சரானார். மூன்று முறை முதலமைச்சராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் இருந்து விலகிய பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் MGR மிகவும் வலுவானவராக உருவானார்.
கடனில் MGR: இப்படியான நிலையில் திமுகவில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய MGR கடனில் இருப்பதாக தகவல்கள் பரவ ஆரம்பித்தது. இந்தத் தகவல் அரசியல் தளத்தில் மட்டும் இல்லாமல், பொது மக்கள் மத்தியிலும் பரவியது. பொதுவாகவே தனது ரசிகர்களைச் சந்திக்கும் வழக்கம் கொண்ட MGR, கட்சி தொடங்கிய பின்னர், தனது தொண்டர்களை தினமும் சந்தித்து பேசி வந்தார். இப்படியான நிலையில் ஒரு நாள், வயதான மூதாட்டி ஒருவர், அவரைப் பார்க்க வந்துள்ளார்.
கண்ணீர்: மூதாட்டி ஒருவர் வந்துள்ளதைப் பார்த்த MGR, அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லியுள்ளார். எதற்காக வந்தீர்கள், என்ன விஷயம் என MGR கேட்டுள்ளார். உடனே அந்த மூதாட்டி, " நீ கடன்ல இருக்கறீரு சொன்னாங்க, அதான் எங்கிட்ட கொஞ்சம் பணம் இருக்குது, அதை உங்கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" எனக் கூறியுள்ளார். மூதாட்டியின் இந்தப் பேச்சினைக் கேட்டதும், MGR, அவரைக் கட்டிப் பிடித்து எமோஷ்னல் ஆகியுள்ளார். மேலும் அந்த மூதாட்டி தான் கொண்டு வந்த பணத்தினை எடுத்து MGR இடம் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை, பேட்டி ஒன்றில் அரசியல் விமர்சகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அதிமுகவினர் மற்றும் MGR ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











