MGR Birthday: சிவாஜி குறித்து புகழ்ந்து பேசிய வாலி.. MGR கொடுத்த ரியாக்ஷன்.. ரொம்பத்தான் தைரியம்!
சென்னை: திரைப்பட நடிகர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் MGR-க்கு இன்று 108வது பிறந்த நாள். எனவே அவரது ரசிகர்களும் அவரது கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தொண்டர்களும், ரசிகர்களும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் MGR குறித்து கவிஞர் வாலி பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
மக்கள் திலகம் என அழைக்கப்பட்டவர் எம்.ஜி. ராமச்சந்திரன். சினிமா பிரபலமாக இருந்த இவர், தொடக்கத்தில் தீவிரமான காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தார். பின்னாலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நட்பு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மீதான பற்று ஆகியவற்றால் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, செயல்பட்டார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், தனி கட்சி தொடங்கி, மூன்று முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தார்.

அவர் மீது இருக்கும் அன்பிற்காகவே இன்றைக்கும் பலர் அவரது கட்சியான அதிமுகவிற்கு வாக்களித்து வருகின்றார்கள். MGR மொத்தம் 136 படங்களில் நடித்துள்ளார். இதில் 133 படங்கள் தமிழ் படங்கள், இரண்டு படங்கள் மலையாளத்திலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். இதில் இவர் இறந்த பின்னர், இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. 1936ஆம் ஆண்டில் இருந்து 1987ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் இருந்தார்.
வாலி: MGR கதாநாயகனாக நடித்த படங்களில் வில்லன்களை அடிக்கும்போது, ஒருவரைக்கூட கொலை செய்ய மாட்டார். மேலும், திருடர்கள், வில்லன்கள் போன்றவர்களை காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுப்பவராகவே இருப்பார். இதன் காரணமாகவே இவரது படங்களை ஆண்டுக் கணக்கில் ரசிகர்கள் தியேட்டர்களில் ஓட வைத்தார்கள். இவர் காலத்தில் இவருக்கு இணையாக இருந்த நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன். நடிப்பில் MGR-விடவும் கைதேர்ந்தவர் இதனை MGR-உம் ஒப்புக்கொண்டுள்ளார்.

MGR : இது தொடர்பாக நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து மறைந்த கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. வாலி கூறுகையில், " நானும் MGR-உம் காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது சிவாஜியின் ஒரு படம் ரிலீஸாகி இருந்தது. அதில் சிவாஜி மிகவும் பிரமாதமாக நடித்திருந்தார். அந்த படம் குறித்து பேசுகையில் சிவாஜியைப் போல ஒரு நடிகன் இல்லவே இல்லை, என்ன சொல்கின்றீர்கள் எனக் கேட்டுவிட்டேன். யாருமே அவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க பயப்படுவார்கள்.

சிவாஜிக்கு அடுத்து: ஆனால் உடனே MGR, ஆமாம், சிவாஜி சிறப்பாகவே நடிக்கின்றார். சிவாஜியைப் போல் சிறப்பாக நடிக்கின்ற, சிவாஜி அளவுக்கு இல்லை என்றாலும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள நடிகர் என்றால் அது முத்துராமன் தான் என MGR கூறினார்" இவ்வாறு வாலி அந்த பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இன்று அவரது பிறந்த நாள் என்பதால் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து, வருகின்றனர்.




Click it and Unblock the Notifications











