MGR Birthday-மாஸ்டர் மைண்ட்..கூடியிருந்த சிவாஜி ரசிகர்களை தன் பக்கம் இழுத்த எம்ஜிஆர்.. வியந்த நடிகர் திலகம்
சென்னை: புரட்சி தலைவர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் எம்ஜிஆர். அவர் உயிரிழந்து 37 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். உதவி செய்வது என்றால் முதலில் எம்ஜிஆரின் பெயரைத்தான் பலரும் நினைவுகூர்வார்கள். ஓடி ஓடி உதவி செய்த விஜயகாந்த்தைகூட எம்ஜிஆருடனேயே ஒப்பிட்டார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் தாக்கம் நிறைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த அடையாளங்களில் ஒருவர் எம்ஜிஆர். கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட அவர் இலங்கையின் கண்டியில் பிறந்தார். பிறகு சில காரணங்களால் தமிழ்நாடு வந்து நாடக கம்பெனியில் இணைந்தார். நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் சதிலீலாவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும்போது அவருக்கு வயது 20. அந்த வயதிலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கலைஞருடன் நட்பு: சதிலீலாவதி படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த எம்ஜிஆருக்கு கலைஞர் கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு ரொம்பவே ஆழமானது. கருணாநிதியின் வசனம், எம்ஜிஆரின் நடிப்பு இரண்டும் சேர்ந்து அவர்களை தொடர்ந்து பயணிக்க வைத்தது. அதன்படி கலைஞர் கருணாநிதி வசனத்தில் மலைக்கள்ளன், மந்திரிகுமாரி என நிறைய படங்களில் நடித்தார். எம். ஜி. ராமச்சந்திரன்.
டாப் ஹீரோ: எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலானவை சில்வர் ஜுப்ளியாக இருந்தது. அவருக்கு போட்டியாக சிவாஜி கணேசனும் வளர்ந்துகொண்டிருந்தார். சிவாஜி நடிப்பில் பின்னி எடுக்க; எம்ஜிஆர் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டார். கமர்ஷியல் பாதையில் வெறும் சண்டை மட்டும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவுவது, மது, சிகரெட் காட்சிகளில் நடிக்காமல் இருந்தது என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் வழி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டார்.
முதலமைச்சர்: தொடர்ந்து திமுகவில் இணைந்து அரசியலிலும் கவனம் செலுத்திய அவர் பரங்கிமலை தொகுதி எம்.எல்.ஏவாக மாறினார். அந்த சமயத்தில் பேரறிஞர் அண்ணா இறந்துவிட கருணாநிதி பொதுச்செயலாளராகவும், எம்ஜிஆர் பொருளாளராகவும் மாறினார். அப்போது இரண்டு பேருக்கும் முட்டிக்கொள்ள திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர். அதனையடுத்து 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் வென்று முதலமைச்சராக மாறினார். அப்போதிருந்து அவர் இறக்கும்வரை கருணாநிதியால் முதலமைச்சராக முடியவில்லை. அந்த அளவுக்கு எம்ஜிஆரின் செல்வாக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி ரசிகர்கள் டூ எம்ஜிஆர் ரசிகர்கள்: 1987ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் எம்ஜிஆர். இந்நிலையில் இன்று அவரது 107ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. எனவே அவர் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம். அதாவது சிவாஜியும், எம்ஜிஆரும் பீக்கில் இருந்த சமயம் அது. சென்னையில் ஒரு ஸ்டூடியோவில் சிவாஜி நடித்த படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்ததாம்.
அப்போது சிவாஜியை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் அதிக அளவு ஸ்டூடியோவுக்கு வெளியே கூடியிருந்தார்களாம். இது சிவாஜிக்கு தெரியவில்லையாம். அந்த சமயத்தில் எம்ஜிஆர் தனது காரில் அந்த ஸ்டூடியோ வழியாக சென்றிருக்கிறார். கூட்டத்தை பார்த்து என்ன ஏது என்று விசாரிக்க; அவர்கள் எல்லாம் சிவாஜி ரசிகர்கள். அவர்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
உடனடியாக காரில் இருந்து இறங்கி அந்த ரசிகர் கூட்டத்தை கூட்டிக்கொண்டு ஸ்டூடியோவுக்குள் சென்றிருக்கிறார் எம்ஜிஆர். பெரும் கூட்டத்தோடு எம்ஜிஆர் வருவதை பார்த்த சிவாஜிக்கு ஒன்றுமே புரியவில்லையாம். நேராக சிவாஜியிடம் வந்த எம்ஜிஆர், கணேசன் இவர்கள் எல்லாம் உங்கள் ரசிகர்களாம். நீண்ட நேரம் உங்களை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றுவிட்டாராம்.
அதனையடுத்து ரசிகர்களை சந்தித்து பேசினாராம் சிவாஜி. ரசிகர்கள் எல்லாம் சென்ற பிறகு அவர் தனக்கு நெருக்காமனவர்களிடம்; எம்ஜிஆர் பண்ணது நல்ல விஷயம்தான். ஆனால் ஒன்று இங்கு வந்தவர்கள் இன்றுவரை எனது ரசிகர்களாக இருந்தார்கள். எம்ஜிஆரின் செயலை பார்த்து நாளை முதல் அவரது ரசிகர்களாக மாறிவிடுவார்கள் என்றாராம். எம்ஜிஆர் அதை திட்டமிட்டு செய்தாரா இல்லை எதார்த்தமாக செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று அவர் இதுபோன்று செய்த செயல் ஒவ்வொன்றும் பலரை அவரது ரசிகர்களாக மாற்றியது என்பது உண்மை. பிறந்தநாள் வாழ்த்துகள் எம்ஜிஆர்.


Click it and Unblock the Notifications











