Vijayakanth - நீங்கள்தான் அவரது வாரிசு.. விஜயகாந்த்திடம் சொன்ன எம்ஜிஆர் மனைவி.. நெகிழ்ச்சியடைந்த கேப்டன்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு விஜயகாந்த்தின் ரசிகர்களையும், தேமுதிக தொண்டர்களையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. அவர்கள் தவிர்த்து பொதுவானவர்களும் விஜயகாந்த்துக்காக வருந்தவே செய்தனர். இந்த சூழலில் விஜயகாந்த் பற்றி உழவன் மகன் இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தமிழ்நாட்டில் பெரும் ஆளுமையாக வலம் வந்தவர். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி முழு ஓய்வில் இருந்தார். அந்த சமயத்தில் ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார் அவர். இப்படிப்பட்ட சூழலில் திடீரென அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரண்ட கூட்டம்: அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. பல மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலக பிரபலங்களும் பெரும்பாலானோர் விஜயகாத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை கழக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நினைவிடமாக அனுசரிக்கப்படும் அந்த இடத்துக்கும் ஏராளமானோர் தினமும் சென்றுகொண்டிருக்கின்றனர்.
உதவி என்றால் விஜயகாந்த்: அவர் உயிருடன் இருந்தபோது பலரும் அவரை ட்ரோல் செய்திருக்கிறார்கள். மீம்ஸ் மெட்டீரியலாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர் உயிரிழந்த பிறகு அனைவருமே விஜயகாந்த்தின் அருமையை தெரிந்துகொண்டனர். ஏனெனில் அவர் சினிமாக்காரர்கள் மட்டுமின்றி சாமானியர்களுக்கும் ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார். அதனாலேயே அவரை கறுப்பு எம்ஜிஆர் என்று மக்கள் அழைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் ரசிகர்: விஜயகாந்த் அடிப்படையிலேயே எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார். எம்ஜிஆர் படங்களை மதுரையில் விஜயகாந்த் பல முறை பார்த்திருப்பதாகவும்; அவர்தான் தனக்கு ரோல் மாடல் என்றும் பல முறை சொல்லியிருக்கிறார். அதனால்தான் என்னவோ எம்ஜிஆர் போலவே உதவிகளை செய்தார்போல. இந்தச் சூழலில் எம்ஜிஆரின் மனைவி விஜயகாந்த்திடம், நீங்கள் மட்டும் எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது வந்திருந்தால் உங்களைத்தான் அவர் வாரிசு என்று அறிவித்திருப்பார் என சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது உழவன் மகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது விஜயகாந்த்தின் பிறந்தநாள் வந்திருக்கிறது. எப்போதும் தனது பிறந்தநாளுக்கு சாப்பாடு போடுவது போன்ற உதவிகளை செய்வார் அவர். ஆனால் அந்தப் பிறந்தநாளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து செய்தாராம். மேலும் எம்ஜிஆர் இல்லத்துக்கும் சென்றாராம். அப்போது எம்ஜிஆர் உயிரிழந்த சமயம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மாதிரியே நீங்கள்: விஜயகாந்த் வருவதை தெரிந்துகொண்ட எம்ஜிஆரின் மனைவி ஜானகி வெளியே வந்து வரவேற்று அவரிடம், 'நீங்கள் ஒரு பாட்டில் வண்டியை ஓட்டிட்டே வருவீங்க. பின்னாடி சில வண்டிகளும் வரும். அதை எம்ஜிஆர் பார்த்துவிட்டு, 'இந்தத் தம்பி என்னை மாதிரியே கட்டுமஸ்தான உடலை வைத்திருக்கிறார். நன்றாக நடிக்கிறார் என சொன்னார்’ என்று ஜானகி கூறினாராம்.
எம்ஜிஆரின் வாரிசு: அதுமட்டுமின்றி எம்ஜிஆர் உயிருடன் இருந்தபோதே நீங்கள் வந்திருந்தால் நீங்கள்தான் தன்னுடைய வாரிசு என்று அறிவித்திருப்பார் என்று ஜானகி சொன்னதும் விஜயகாந்த் நெகிழ்ச்சியடைந்துவிட்டாராம். பிறகு அவரிடம் பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என ஜானகி கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த், 'எம்ஜிஆர் ஐயா பிரசாரத்துக்கு பயன்படுத்திய வண்டி வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டு சென்றாராம். இதனை உழவன் மகன், ஊமை விழிகள் படங்களின் இயக்குநர் அரவிந்த் ராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











