அது ஏற்கனவே செத்துடுச்சு.. மேற்கொண்டு குத்தி கொல்லாத ப்பா.. கமலை ஸ்பாட்டில் கலாய்த்த நாகேஷ்
சென்னை: நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். உடல்மொழி, வாய் மொழி என அனைத்திலும் காமெடியை கலந்துகட்டி அடிப்பவர். இன்றுவரை எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் அவரது இடத்தை நெருங்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கமல்ஹாசனை நாகேஷ் கலாய்த்த சம்பவத்தை பார்க்கலாம்.
அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்த நாகேஷுக்கு கலை மீது ஆர்வம் இருந்ததால் வேலையை உதறிவிட்டு சென்னை வந்தார். தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த அவர் மனமுள்ள மறுதாரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்தது. தொடர்ந்து நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு பெயரை பெற்றுக்கொடுத்தது. அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது கே.பாலசந்தர் எழுதிய நாடகத்தை மையமாக வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம்.அந்தத் திரைப்படத்தில் நாகேஷின் உடல்மொழியும், நடிப்பும் வேறு தளத்தில் இருந்தன. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டார் நாகேஷ்.
பிஸியான நடிகர்: சர்வர் சுந்தரம் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அதேபோல் அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன. நாகேஷின் நடிப்பும் உச்சம் சென்றது.

1000 படங்கள்: நாகேஷ் கிட்டத்தட்ட 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ரோல், வில்லன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடக்கூடியவர் நாகேஷ். இன்றுவரை யார் காமெடி செய்தாலும் அதில் நாகேஷின் உடல்மொழி கொஞ்சமேனும் வந்துவிடும். அந்த அளவு அவர் இந்த தமிழ் திரை உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறார். அவர் கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
செம கலாய் நாகேஷ்: நாகேஷை பொறுத்தவரை திரையில் மட்டும் காமெடி செய்பவர் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிடுவார். அதனால்தான் சீன் பேப்பரில் இல்லாத வசனங்களைக்கூட உடனுக்குடன் சொல்லக்கூடிய நபராக திகழ்ந்துகொண்டிருந்தார். முக்கியமாக அவரிடம் யாராவது பேச்சு கொடுத்தாலே; அவர் நம்மை கலாய்க்கிறாரா இல்லை நன்றாகத்தான் பேசுகிறாரா என்பது தெரியாது என்றுதான் அவருடன் பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.
குத்தி கொன்னுடாத கமல்: அபூர்வ சகோதரர்கள் படத்தில்கூட ஒரு சீனில் அப்பு கமலை பார்த்து, பாதிதான் இருக்கு மீது எங்கே என்று கேட்பார். அந்த வசனத்தை கிரேஸி மோகனோ, கமல்ஹாசனோ சொல்லவில்லை. நாகேஷாகவே போட்ட டயலாக் அது. அப்படி அதே படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது, ஷூட்டிங் இடைவேளையில் கமலும் நாகேஷும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது கோழி இறைச்சியை போர்க் கரண்டியை வைத்து சாப்பிடுவதற்காக குத்தி கொண்டிருந்தாராம் கமல். அதனை கவனித்த நாகேஷோ, 'கமல் அந்த கோழி ஏற்கனவே செத்துடுச்சு. மேற்கொண்டு நீயும் குத்தி கொன்னுடாத ப்பா' என்று கலாய்த்துவிட்டாராம். இதனை கேட்ட கமலோ ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி சிரித்துவிட்டாராம். கமலும், நாகேஷும் சேர்ந்து நம்மவர், அபூர்வ சகோதரர்கள், பஞ்ச தந்திரம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











