Napoleon: "ரொம்ப அதிகபிரசங்கி மாதிரி பேசிட்டேன்..” ஆனாலும் நெப்போலியனுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர், திரைப்படங்களில் அதிகம் நடிப்பது இல்லை. இந்நிலையில் கமல்ஹாசனுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார் நெப்போலியன்.
நெப்போலியனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படத்திலேயே கவனிக்க வைத்த அவர், பின்னர் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்தார். சீவலப்பேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே படங்கள் தான் நெப்போலியனின் ஆரம்பகால சினிமா கேரியரை மாற்றி அமைத்தன. இரண்டுமே கிராமத்துப் பின்னணியில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சீவலப்பேரி பாண்டி திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து வெரைட்டியாக பல கேரக்டர்களில் நடித்த நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆனதோடு சாஃப்ட்வேர் பிஸினஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், கமல்ஹாசனுடன் நடித்தது பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அதாவது ஒருமுறை நெப்போலியன் சென்றிருந்த நிகழ்ச்சியில் ரஜினியும் கமல்ஹாசனும் இருந்துள்ளனர். அப்போது ரஜினி மட்டுமே நெப்போலியனுடன் கை குலுக்கி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது கமல் நெப்போலியனை கண்டுகொள்ளவே இல்லையாம். ஆனால், சீவலப்பேரி திரைப்படம் வெளியான பின்னர் நெப்போலியனை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார் கமல்.
அப்போது உடனே ஓடிச் சென்று நெப்போலியனை பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். சீவலப்பேரி பாண்டி படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு தான் கிடைத்தது. ஆனால், என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது. இப்போது படம் பார்த்தேன், அதில் என்னைவிட நீங்கள் தான் பொருத்தமாக இருக்கீங்க. சீவலப்பேரி பாண்டி படத்தில் நான் நடிக்காமல் போனதும் நல்லதாகிவிட்டது என நெப்போலியனை பாராட்டியுள்ளார்.
இதனால் நெகிழ்ச்சியான நெப்போலியன், உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என கமலிடம் கூறியுள்ளார். உடனே அந்நேரம் மருதநாயகம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க சான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால், நெப்போலியனுக்கு அப்போது ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்ததால், பாசிட்டிவான ரோலாக இருந்தால் நடிக்கிறேன் என கமலிடம் கூறியுள்ளார். அவரும் நெப்போலியனை கட்டாயப்படுத்தாமல் சரி பார்க்கலாம் என சொல்லிவிட்டாராம்.
ஆனால், அதன்பின்னர் கமலிடம் இருந்து அழைப்பே வரவில்லை. இதனால் ரொம்பவே அதிகபிரசங்கித்தனமாக மருதநாயகத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டோமோ என நொந்துவிட்டாராம் நெப்போலியன். இந்த சூழலில் நெப்போலியனே எதிர்பார்க்காத நேரத்தில் விருமாண்டி படத்தில் நடிக்க சான்ஸ் கொடுத்துள்ளார் கமல். நல்லம்ம நாயக்கர் என்ற கேரக்டர் நெப்போலியனுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. அதன்பின்னர் தசாவதாரம் படத்திலும் நெப்போலியனுக்கு இரண்டாம் குலோத்துங்கச் சோழன் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











