Karthik - நவரச நாயகனிடம் சென்ற சேது கதை.. கார்த்திக் அடித்த நச் கமெண்ட் என்ன தெரியுமா?
சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தக் கதையை அதன் இயக்குநர் பாலா எடுத்ததும் விக்ரமிடம் சொல்லவில்லை. முரளி, விக்னேஷ், நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்டோரிடமும் சொல்லியிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது.
என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்: முதல் இரண்டு படங்களிலேயே முக்கியமான இயக்குநர் என்று பாலா பெயர் எடுத்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களும் மிகச்சிறந்த படைப்பாக இருக்கின்றனர். அதிலும் பாலா சொன்னால் நடிகர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலைதான் சினிமாவில் இருந்தது. அவரது இயக்கத்தில் ஓரிரு காட்சிகளிலாவது தோன்றிட வேண்டும் என நடிகர்கள் தவம் இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அவர் வணங்கான் திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் மே மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
ராஜகம்பீரன் பாலாவை பற்றி: இந்நிலையில் பாலாவுக்கும், சியான் விக்ரமுக்கும் திருப்புமுனையை கொடுத்த சேது படம் பற்றி பத்திரிகையாளர் ராஜகம்பீரன் என்பவர் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சேது திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் படம் மாதிரி அப்போது எந்தப் படமும் பேசவில்லை. காதலால் மனப்பிறழ்வுக்கு ஆளாகி தன் காதலியை அடையாளம் தெரியாமல் தவிக்கிறார் ஹீரோ. இந்தக் கதையை பலரிடமும் சொன்னார் பாலா. நவரச நாயகன் கார்த்திக்கிடமும் சொன்னார். அதற்கு அவரோ, 'நான் மொட்டை போட்டு நடிக்கிறதா? தியேட்டரையே உடைச்சிடுவாங்க' என்று சொல்லி ரிஜெக்ட் செய்துவிட்டார்.
மென்மையானவை: பாலாவின் குருநாதரான பாலுமகேந்திராவின் படங்கள் அனைத்துமே மென்மையானவை. மௌனமாக இருப்பதுதான் அவருக்கு பிடிக்கும். அவரிடமிருந்து எதார்த்தத்தை கற்றுக்கொண்ட பாலா வன்முறையின் எதார்த்தத்தையும் புகுத்திவிடுகிறார். பாலாவின் கதைகள் ஹீரோயிசத்தை உடைக்கக்கூடியவை. ஹீரோவையே காப்பாற்ற முடியாது. அதனால்தான் பாலாவின் படங்களில் உச்ச நட்சத்திரங்கள் நடிக்க தயங்குகிறார்கள்.
வெற்றிமாறனும் அப்படித்தான்: வெற்றிமாறனும் அந்தவகைதான். அதனால்தான் அவரும் தனுஷை தாண்டி பெரிய நட்சத்திரங்களை அணுக முடியாமல் இருக்கிறார். அவரும் ஹீரோயிசத்தை உடைக்கக்கூடிய படைப்பாளிதான். நான் கடவுள் படத்தில் முதலில் அஜித் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அப்படம் அவருக்கு செட் ஆகாததால் நடிக்கவில்லை. அதேபோல்தான் வணங்கான் திரைப்படத்திலிருந்தும் சூர்யா விலக நேர்ந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











