Asin - கஜினி பட கதைதான் அசின் உண்மை வாழ்க்கையிலும் நடந்ததா?.. ஆச்சரிய செய்தி இதோ
சென்னை: Asin (அசின்) கஜினி படத்தில் நடந்ததுபோல் அசினின் உண்மை வாழ்க்கையிலும் நடந்ததாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தொழிலதிபரின் மகள். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த விளம்பரத்திற்கு பிறகு மலையாளத்தில் 2001ஆம் ஆண்டு நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வாகா என்ற படத்தில் நடித்தார். முதல் படம் சுமாரான வரவேற்பை பெற்றதை அடுத்து தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் ஒரு படத்திலும், நாகார்ஜுனாவுடன் ஒரு படத்திலும் 2003ஆம் ஆண்டு நடித்தார்.

தமிழில் அறிமுகம்: தெலுங்கில் நடித்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அசின் மீது கவனம் பாய்ந்தது. இதனையடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். மலையாளம் கலந்த தமிழோடு பேசும் கதாபாத்திரத்தில் தோன்றிய அசின் ரொம்பவே கேஷுவலாக நடித்து அப்ளாஸை அள்ளினார். அவரது துறுதுறுத்தனமும், நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
முன்னணி நடிகை: அந்தப் படத்திலிருந்து அசினின் அலை கோலிவுட், டோலிவுட்டில் அடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக கோலிவுட்டில் சரசரவென்று முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார் அசின். விஜய்யுடன் நடித்த சிவகாசி, போக்கிரி ஆகிய இரண்டு படங்களும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதனையடுத்து சூர்யாவுடன் நடித்த கஜினி படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. தொடர்ந்து சூர்யாவுடன் வேல், அஜித்துடன் ஆழ்வார், கமலுடன் தசாவதாரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
ஹிந்தியில் அசின்: தமிழில் கஜினி கொடுத்த வெற்றி அவரை பாலிவுட்டுக்கும் அழைத்து சென்றது. அங்கு சென்றும் தனது திறமையை காட்டிய அவர் சல்மான் கான், அஜய் தேவகான், அக்ஷ்ய குமார் உள்ளிட்டோருடன் நடித்து பீக்கிற்கு சென்றார். இடையே தமிழில் விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. அதுதான் அவர் தமிழில் கடைசியாக நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: மிகப்பெரிய ஸ்டாராக வலம் வந்துகொண்டிருந்த அசின் தனது கரியர் உச்சத்தில் இருந்தபோதே சினிமாவுக்கு முழுக்கு போட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அப்போதிருந்து சினிமாவில் தலைகாட்டாமல் இருந்துவருகிறார். அந்தத் தம்பதிக்கு ஆரின் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
கல்பனா: அசின் ஏற்றிருந்த கதாபாத்திரங்களிலேயே கஜினி படத்தில் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரம் எல்லோருக்கும் ஃபேவரைட். விளம்பரத்தில் நடிப்பவராக தோன்றி சூர்யா மிகப்பெரிய தொழிலதிபர் என்று தெரியாமலேயே அவரை காதலிக்கும்படி அந்தக் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஒவ்வொரு சீனிலும் தனது வெகுளித்தனத்தையும், போலி பந்தாவையும் சூர்யாவிடமே வெளிப்படுத்தி அதகளம் செய்திருப்பார்.
ராகுல் ஷர்மா: இந்தச் சூழலில் கஜினி படத்தில் நடந்ததுபோல் அவரது உண்மை வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அதாவது அசினின் நண்பர் அக்ஷய் என்பவர் மூலம்தான் ராகுல் ஷர்மா அசினுக்கு அறிமுகமானாராம். ராகுல் ஷர்மாவும், அசினும் தொடர்ந்து டச்சில் இருந்திருக்கின்றனர். ஆனால் அசினுக்கோ ராகுல் ஷர்மா மைக்ரோமேக்ஸ் மொபைல் கம்பெனியின் நிறுவனர் என்பது தெரிந்திருக்கவில்லை. இதற்கிடையே ராகுலின் குண நலன்கள் பிடித்துப்போக அசின் காதலிலும் விழுந்துவிட்டார்.
ஒருகட்டத்தில் அசினின் நண்பர் அக்ஷய் அவரிடம் ராகுல் ஷர்மாதான் மைக்ரோமேக்ஸின் ஓனர் என கூற அசினுக்கு ஷாக்குடன் ஆச்சரியமும் தோன்றியதாம். இத்தனை நாட்கள் தான் இவ்வளவு பெரிய தொழிலதிபர் என்று சொல்லாமல் எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறார் என ஆச்சரியப்பட்டு காதலும் வலுவடைந்திருக்கிறது. இதற்கிடையே ராகுலும் அசினை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார். தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











