காந்தாரா சாப்டர் 1 போல கொண்டாடியிருக்க வேண்டிய படம் சார்.. ஆனால், கங்குவா சறுக்கியது எங்கே தெரியுமா?
சென்னை: கடந்த ஆண்டு இதே தேதி அதாவது நவம்பர் 14ஆம் தேதி இந்திய அளவில் குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் சூர்யாவின் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கம், தேவி ஸ்ரீ பிரசாத் இசை, கார்த்தியின் கேமியோ, பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான கங்குவா மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.
ஒரு படம் தோல்வியைச் சந்திக்கிறது என்றால், ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஆனால் இந்த படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சொல்வதற்கு பதிலாக காரணங்கள் என்று பட்டியலிடலாம். அந்த அளவுக்கு படத்தின் படுதோல்விக்கு படக்குழுவே ராப்பகலாக மாங்கு மாங்கு என உழைத்துள்ளார்கள் எனலாம். அந்த அளவுக்கு படத்தில் பல காரணங்கள் உள்ளது.

முதல் காரணம், படத்தின் திரைக்கதை. சிறுத்தை சிவா கதை திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படத்தின் திரைக்கதையில் பல சொதப்பல்கள். அதாவது, ரஷ்யாவில் இருந்த சிறுவன் எப்படி அதே உடையில் கோவாவுக்கு வந்தான் என்பதுதான்? அவன் எப்படி வந்தான் என்பது படத்தில் காட்டப்படவில்லை. அதேபோல் படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் விமானத்தை சுடுகிறார்கள், சூர்யாவை சுடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. 2000களில் ஒரு பாடலில் எப்படி கதாநாயகியை பிகினி அணிந்து நடக்கச் சொல்வார்களோ அதேபோல் இந்த படத்திலும் நடக்க வைத்திருந்தார்கள். இதைவிட முக்கியமான இன்னொரு விஷயம் கே.எஸ். ரவிக்குமார் வரும் காட்சியில் இடம் பெற்ற 2000 ரூபாய் பணம், என ஏகப்பட்ட சொதப்பல்.
கதறிய காதுகள்: படம் தான் சொதப்பி விட்டது, பின்னணி இசையாவது பழங்கால கதைக்கு ஏற்ற வகையில் இருந்ததா என்று பார்த்தால், எந்த அளவுக்கு சிறப்பான சவுண்ட் சிஸ்டம் கொண்ட தியேட்டரில் படம் பார்த்தாலும் காதை கிழித்து ரத்தம் வரும் அளவுக்கு மோசமாக இசையமைத்திருந்தார். படக்குழுவே தியேட்டர்களுக்கு சவுண்ட் குறைத்து வைக்க சுற்றறிக்கை அனுப்பியது. ரசிகர்கள் தொடங்கி ஆஸ்கார் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டி வரை படத்தின் பின்னணி இசையை கடுமையாக விமர்சித்திருந்தார். கதாபாத்திரங்களும் கத்திக் கொண்டே பேசியிருந்தனர்.

ஓவர் பில்டப்: படக்குழு கொடுத்த ஓவர் பில்டப், குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த பில்டப் எல்லாம் காலம் பல விமர்சகர்களும் அவரை கடுமையாக விமர்சிக்க வழி வகுத்தது. அவர் கொடுத்த பில்டப்களில் பான் இந்தியா ஹிட், பான் வோல்ட் ஹிட்டும் வாய்ப்பு உள்ளது என்பதுதான். படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்ற பின்னர், ஜோதிகா தனது எக்ஸ் பக்கத்தில் படத்திற்கும் படக்குழுவுக்கும் கொடுத்த முட்டுக்கு இணையவாசிகள் தொடங்கி ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பல விமர்சகர்களும் பதிலடி கொடுத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றது.
படத்தில் எது நன்றாக இருந்தது?:படத்தில் பாராட்டும்படியாக இருந்தது என்றால் ஒட்டுமொத்த குழுவின் நடிப்பு. அதிலும் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிரமிக்க வைத்தது. மொத்தமாகவே வேறு ஒரு உலகத்திற்குள் அழைத்துச் சென்ற ஆர்ட் டைரக்ஷனும் படத்தில் பாராட்டத் தகுந்தவை. இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி புஸ்வானம் ஆகிப்போன படமாக மாறியதில் கங்குவா எப்போதும் முன்னணி இடம் வகிக்கும்.



Click it and Unblock the Notifications











