ஒரு டயலாக்கிற்காக 4 நாட்கள் ஷூட்டிங்கை தள்ளி வைத்த பாக்யராஜ்.. பார்த்திபன் செய்த சம்பவம் தெரியுமா?
சென்னை: திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். இந்தச் சூழலில் அவர் ஒரு வசனம் வராததற்காக நான்கு நாட்கள் படத்தின் ஷூட்டிங்கை தள்ளி வைத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

இப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக அவர் கொடுத்த ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி சென்ட்டர், சி சென்ட்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
சிறந்த நடிகர் பாக்யராஜ்: இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் அவ்வப்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். வாகை சூட வா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அட்டகாசமாக நடித்திருந்தார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் டாடா திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக பாக்யராஜின் நடிப்புக்கு ரசிகர்களிடம் அபரிமிதமான அப்ளாஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சின்ன வீடு திரைப்படம்: இப்படிப்பட்ட சூழலில் பாக்யராஜ் இயக்கிய ஒரு படத்தின் போது நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது தானே ஹீரோவாக நடித்து இயக்கிய படம்தான் சின்ன வீடு. அதில் கல்பனா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். அந்தப் படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இன்றுவரை சேனல்களில் அந்தப் படம் போட்டால் பார்ப்பதற்கென்றே தனி கூட்டம் இருப்பதுண்டு. காமெடி, எமோஷன் என அனைத்தையும் கலந்துகட்டி படத்தை கொடுத்திருப்பார் அவர்.
நான்கு நாட்கள் ஷூட்டிங் நிறுத்தம்: அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது கல்பனா பாக்யராஜிடம் பேசும்படியான ஒரு காட்சிக்கு இவர் நினைத்தபடி வசனம் வரவில்லையாம். இதன் காரணமாக நான்கு நாட்கள் ஷூட்டிங்கை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தாராம். ஒருநாள் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பார்த்திபன் பாக்யராஜிடம் சென்று, சார், 'மாமா நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கும் தோளில் போடும் துண்டு போன்று இல்லாவிட்டாலும்; உங்களுக்கு உபயோகப்படும் காலில் போடும் செருப்பு மாதிரிகூடவா இருக்கக்கூடாது' என வசனத்தை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டாராம். உடனடியாக மகிழ்ச்சியடைந்த பாக்யராஜ் அந்த சீனை எடுத்து முடித்தாரம். இதனை பார்த்திபன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











