அவ்வளவு கடன் இருந்தது.. எல்லாம் விஜயகாந்த்தால் தீர்ந்தது.. செந்தூரப்பாண்டி கதை சொன்ன பொன்னம்பலம்
சென்னை: பொன்னம்பலம் 90களில் தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்தவர். அவரது நடிப்புக்கென்று பலர் ரசிகர்களாக இருந்தனர். சூழல் இப்படி இருக்க ஒருகட்டத்தில் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தனக்கு ஏற்பட்ட கடன் அடைந்தது குறித்து பேசியிருக்கிறார் அவர்.
தமிழ் சினிமாவில் வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். ஆஜானுபாகுவான உடலும், வித்தியாசமான முக பாவனையும் என ஒரு காலத்தில் திரையுலகை கலக்கியவர் பொன்னம்பலம். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், சரத்குமார் என தொடர்ந்து பலரின் படங்களில் நடித்தவர். முக்கியமாக நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பு இன்றுவரை அப்ளாஸை அள்ளக்கூடியது. மேலும் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார்.

அபூர்வ சகோதரர்களில் அறிமுகம்: சண்டைக் கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றிவிழா, மைக்கேல் மதன காம ராஜன், நாட்டாமை, பெரிய மருது, மாநகர காவல் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.
பிக்பாஸில் பொன்னம்பலம்: முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சீசனில் சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. எனினும், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பொய்த்துப்போனது.
உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க பொன்னம்பலத்துக்கு சிறுநீரகத்தில் பிரச்னை வந்தது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உடல்நலம் தேறியது. அந்த சமயத்தில் தனக்கு பலரும் உதவி செய்ததாகவும்; தனது உறவினர் ஒருவரால்தான் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தனக்கு ஏற்பட்ட கடனை அடைத்தது குறித்து அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பொன்னம்பலம் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "செந்தூரப்பாண்டி படத்தின் கதையை கேட்க எஸ்.ஏ.சி ஆஃபிஸுக்கு சென்றிருந்தேன். அப்போது என்னுடைய கேரக்டர், படத்தின் கதை, எவ்வளவு பட்ஜெட் என்றெல்லாம் சொல்லிவிட்டு, நான் சொல்கிற சம்பளத்துக்கு சரி என்றால் படம் பண்ணலாம் என்று எஸ்.ஏ.சி சொல்லிவிட்டார். அந்த சமயத்தில்தான் நான் வேலை இல்லாமல் ஒருவருடம் இருந்தேன். அதனால் 50,000 கொடுத்தாலே போதும் என்ற நிலைமைதான் எனக்கு இருந்தது.
கடன் இருந்தது: அதுமட்டுமின்றி அப்போது எனக்கு கொஞ்சம் கடன் இருந்தது. அதனை அடைத்தால் போதும் என்று இருந்தேன். ஆனால் எஸ்.ஏ.சியோ, 'எதுவும் பேசக்கூடாது. நான் என்ன சொல்கிறேனோ அதுதான் சம்பளம். என்னை பற்றி வெளியே கேட்டுக்கொள்ளுங்கள். சொன்னதை சரியாக கொடுத்துவிடுவேன். விஜயகாந்த் வேறு உன்னை நடிக்க வைக்க சொல்லியிருக்கிறார் என சொல்லி செக் ஒன்றை என்னிடம் கொடுத்தார்.
இங்கே பிரிக்காதே: விஜயகாந்த் சொன்னது, படத்தில் மெயின் வில்லன் ஆகிய காரணங்களால் எதுவாக இருந்தாலும் ஒகேதான் என்று நான் வாங்கினேன். உடனே அவர், கவரை இங்கே வைத்து பிரித்து பார்க்காதே. தொகையால் மனஸ்தாபம் வரலாம். எனவே வீட்டுக்கு சென்று பிரித்து பார் என சொல்லிவிட்டார். நானும் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் கழித்து கவரை பிரித்து பார்த்தேன். அதில் ஒரு லட்சம் ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது. அது வெறும் அட்வான்ஸ்தான். சம்பளம் 2.75 லட்சம் ரூபாய்தான். அந்தத் தொகையால் எனது கடன்கள் எல்லாத்தையும் அடைத்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











