தக் லைஃப் மணிரத்னம் எடுத்த படம்.. வருத்தப்பட்ட பிரபாகரன்..எதற்காக தெரியுமா?
சென்னை: இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். ஏராளமான படங்களை இயக்கியிருக்கும் அவர் கடைசியாக தக் லைஃப் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. பெரும்பாலும் சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டுகளை எடுத்து சர்ச்சைகளை சம்பாதிக்கும் மணி; தக் லைஃபிலும் திரிஷா - கமல் - சிம்பு உறவு முறையை படத்தில் வைத்து விமர்சனத்தை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் எடுத்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை பார்த்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் வருத்தப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
பகல் நிலவு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாத அவர் பாரதிராஜா அல்லது மகேந்திரனிடம் உதவி இயக்குநராக சேர வேண்டுமென்று விரும்பியவர். ஆனால் அது கைகூடவில்லை. இதனையடுத்து சொந்தமாக முயற்சித்து இயக்குநராக அவதாரம் எடுத்துவிட்டார். முதல் படம் சாதாரண கதைதான் என்றாலும் அவரது மேக்கிங் வித்தியாசமாக இருந்ததால் முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்றார்.
முக்கியமான இயக்குநர்: அதனைத் தொடர்ந்து மணி இயக்கிய மௌன ராகம், அஞ்சலி, நாயகன், தளபதி என வரிசையாக ஹிட்டடித்தன. தான் எடுக்கும் படத்தில் தனித்துவமான ஸ்டைலை வைப்பதை அவர் வழக்கமாக்கி கொண்டதால் கோலிவுட்டில் குறுகிய காலத்திலேயே முக்கியமான இயக்குநர் என்ற பெயரை பெற்றார். அதுமட்டுமின்றி வெறும் திரைக்கதை மட்டுமின்றி ஒரு பாடலை எப்படி கையாள வேண்டும் என்பதற்கும் ஒரு உதாரணத்தை செட் செய்துவைத்தார் அவர்.

பாடல்கள் எல்லாம் கவித்துவம்தான்: அவரது படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலை பார்த்தாலே போதும் சரியான இடத்தில் ப்ளேஸ் செய்திருப்பார். அதேபோல் அவுட்டோர் லொக்கேஷனோ; இன்டோர் லொக்கேஷனோ எதுவாக இருந்தாலும் அதில் கவித்துவமான ஃப்ரேம்களை வைத்து அதகளம் செய்துவிடுவார். உதாரணமாக அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு பாடலை எடுத்துக்கொள்ளலாம்.முழுதாக கட்டி முடிக்கப்படாத வீட்டுக்குள் இப்படி ஒரு பாடலை கவித்துவமாக எடுக்க முடியுமா என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள்.
சென்சிட்டிவ் சப்ஜெக்ட்தான்: அதேபோல் 90களில் அவர் சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டுகள் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். காஷ்மீரில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து ரோஜாவில் அப்படிப்பட்ட பாதையை தேர்ந்தெடுத்த அவர்; தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு கலவரத்தை வைத்து பம்பாய், காஷ்மீர் பிரச்னையை வைத்து உயிரே, ஈழ பிரச்னையை பின்னணியாக கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால் என பயணப்பட்டார்.
விமர்சனங்கள்: அவர் அப்படிப்பட்ட சப்ஜெக்ட்டுகளை தொட்டாலும் அவர் மீது எப்போதும் ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அந்த மாதிரியான படங்களில் எப்போதுமே வலதுசாரி சிந்தனையுடன்தான் அணுகியிருப்பார். பல வரலாற்று உண்மைகளை மாற்றித்தான் திரைக்கதை, வசனங்களை வைத்திருப்பார் என்றெல்லாம் பலர் விமர்சிப்பார்கள். அப்படித்தான் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமும் விமர்சன வட்டத்துக்குள் சிக்கியது.
வருத்தப்பட்ட பிரபாகரன்: அந்தப் படத்தில் எழுத்தாளர் சுஜாதாதான் வசனம் எழுதியிருப்பார். ஈழ போராட்டத்தை பற்றியும், ஆயுத அரசியல் குறித்து அவர் எழுதிய சில வசனங்கள் போராட்ட வரலாற்றை மாற்றி பேசும்படி இருந்தது என்பது பெரும்பாலானோரின் கருத்து. அதேபோல் ஒரு போர்க்களம் எப்படி இருக்கும்; அதிகார பலமிக்க இராணுவம் அப்பாவி மக்கள் மீது எப்படி தாக்குதல் நடத்தும்; அந்த பகுதி மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பது பற்றியெல்லாம் அடிப்படை புரிதல் இல்லாமல் மணிரத்னம் காட்சிகளை வைத்திருந்ததாகவும் பலர் விமர்சனத்தையும், வருத்தத்தையும் முன்வைத்தார்கள்.
அப்படித்தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் வருத்தப்பட்டிருக்கிறார். அதாவது பாதிரியார் ஜெகத்கஸ்பர் ஒருமுறை ஈழம் சென்று பிரபாகரனை சந்தித்தார். அப்போது அவருடன் உரையாடும்போது தமிழ் சினிமாவின் போக்கை பற்றிய பேசிய பிரபாகரன்; 'கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எங்களது வாழ்வியலை பின்னணியாக கொண்டு மணிரத்னம் இயக்கியிருக்கிறார். ஆனாலும் அவர் அந்தப் படத்தில் எங்கள் போராட்டத்தை வேறு விதமாக சித்தரித்துவிட்டார். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது' என கூறினாராம். இதனை ஜெகத்கஸ்பர் தான் எழுதிய வீரம் விளைந்த ஈழம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











