யாரு அது.. என் மகனுக்கு முன்னாடி.. பிரபுதேவா அப்பாவை கடுப்பாக்கிய வடிவேலு
சென்னை: வடிவேலு நடிப்பில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் பற்றிய சுவாரஸ்ய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது.
வடிவேலுவின் காமெடி இன்றி ஒருவரால் ஒரு நாளை கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அனைத்து நாட்களிலும், அனைவரிடமும் வியாபித்திருக்கிறார். ராஜ்கிரணால் சினிமாவுக்கு வந்தவர் இன்று இருக்கும் உயரம் வேறு. அதற்கு அவரது திறமை மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நடிக்க வந்த ஆரம்பத்தில் எந்தவித ஈகோவும் இல்லாமல் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதில் வடிவேலுவின் உடல்மொழி மட்டும் தனியாக தெரிந்தது.

டாப் நடிகர்: நகைச்சுவை மட்டுமின்றி அப்போதே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். அப்படி அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்றன. அதேபோல் தன்னுடைய நகைச்சுவையில் எந்தவிதமான உருவ கேலியும் செய்யாமல் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு நடித்தது அவரை மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசென்றது. அதேபோல் அவரது டயலாக் டெலிவிரியும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாயத்து: சூழல் இப்படி இருக்க விஜயகாந்த்துக்கும் தனக்கும் இருந்த பிரச்னையை அவரே பெரிதாக்கிக்கொண்டார். குறிப்பாக அவரை எதிர்க்கிறேன் என்பதற்காக அரசியல் மேடை ஏறிய அவர்; தனது கிராஃபை உச்சத்திலிருந்து அதள பாதாளத்தில் விழ வைத்தார். மேலும் அவரை வைத்து படம் எடுக்க பலரும் யோசித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டார். இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகள்தான் டிவிக்கள், மொபைல்கள் என அனைத்திலுமே இருந்தது.
ரீ என்ட்ரி: ஒருவழியாக அவரது பஞ்சாயத்துக்கள் அனைத்துமே முடித்து வைக்கப்பட்டன. அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்த அவருக்கு அந்தப் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் வேறு மாதிரியான வடிவேலுவை ரசிகர்களுக்கு பரிசளித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
பிரபுதேவா பேட்டி: இந்நிலையில் வடிவேலு குறித்து பிரபுதேவா பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ஒரு பேட்டியில் அவர், "நானும், வடிவேலுவும் ஏழையின் ஜாதி படத்தில் ஒன்றாக வேலை செய்தோம். அதில் ஒரு பாடல் வரும். அப்போதே வடிவேலு நடனம் ஆடுவார். நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். எனது அப்பாதான் கோரியோகிராஃபி செய்தார். அந்தப் பாடலில் முன்னாடி வந்து ஆடிவிடு என்று விஜயகாந்த் சார் சொல்லியிருப்பார் போல. அதனால் அவரும் வந்து என்னை மறைத்து ஆடிவிட்டார். உடனே எனது அப்பா டென்ஷன் ஆகி, 'யாரு டா அது எனது மகனை மறைத்துக்கொண்டு ஆடுவது' என்று கத்திவிட்டார். உடனடியாக வடிவேலு கூட்டத்தில் சென்று மறைந்துகொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











