Prabhu: சிவாஜியுடன் முதல் பட ஷூட்டிங்.. எம்ஜிஆரை பார்க்கச் சென்ற பிரபு.. கண் கலங்கிய நடிகர் திலகம்!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபு, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது முதல் படமான சங்கிலி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

சிவாஜியை காக்க வைத்த பிரபு
இந்தியத் திரையுலகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது நடிப்பால் பிரபலமானவர் சிவாஜி கணேசன். அவரை செவாலியே சிவாஜி, நடிகர் திலகம் என ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அவரது மகன் பிரபுவும் நடிகராக வலம் வந்தார். 1982-ஆம் ஆண்டு வெளியான சங்கிலி திரைப்படத்தில் தான் பிரபு ஹீரோவாக அறிமுகமானார்.
சி.வி ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் நடித்திருந்தார். தனது மகன் பிரபு ஹீரோவாக நடிப்பதால், அவருக்கு சப்போர்ட்டாக சிவாஜியும் நடித்தது குறிப்பிடத்தக்கது. பிரபு, ராஜாளி என்ற கேரக்டரிலும், சிவாஜி, DSP சரவணன் சிவராஜ் என்ற பாத்திரத்திலும் நடித்திருந்தனர். அவர்களுடன் ஸ்ரீப்ரியா, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், சுருளி ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சங்கிலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்காக சிவாஜி தனது வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அப்போது பிரபுவையும் கூட்டிச் சென்றுவிடலாம் என அவருக்காக காத்திருந்தாராம். அப்போது வந்த பிரபு, சிவாஜியை நீங்கள் மட்டும் முதலில் செல்லுங்கள், நான் பின்னாலேயே வந்து விடுவேன் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட சிவாஜி, முதல் நாளே படப்பிடிப்புக்கு தாமதமா வருவியா? அதெல்லாம் தப்பு, சீக்கிரம் என் கூடவே வா என்றுள்ளார்.
மேலும், முதல் காட்சியே நாம் இருவரும் சேர்ந்து நடிப்பது தான் எனவும் பிரபுவிடம் சிவாஜி கூறியுள்ளார். ஆனாலும் அசராத பிரபு சிவாஜியை அனுப்பிவிட்டு, சில மணி நேரங்கள் தாமதமாக படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார். பிரபு லேட்டாக வந்ததை பார்த்த சிவாஜி, அவரை திட்டியதோடு ஏன் லேட் என்றும் கேட்டுள்ளார். அதன்பின்னரே சிவாஜியிடம் உண்மையைக் கூறியுள்ளார் பிரபு.
அதாவது, முதல் படம், முதல் நாள் ஷூட்டிங் என்பதால் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றேன் எனத் தெரிவித்துள்ளார். பிரபு பெரியப்பா என சொன்னது எம்ஜிஆரை தானாம். இதனைக் கேட்ட சிவாஜி பிரபுவை கட்டியணைத்து கண் கலங்கிவிட்டாராம். தனது அப்பா சிவாஜியே பெரிய நடிகராக இருந்தாலும், எம்ஜிஆர் மீது அதிக மரியாதை வைத்துள்ளார் பிரபு.


Click it and Unblock the Notifications











