கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம்.. முதலில் நடிக்கவிருந்தது அந்த நடிகரா?
சென்னை: பிரகாஷ் ராஜ் இந்திய அளவில் பிரபலமான நடிகர். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பாலசந்தரின் கண்களில் பட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். தனது ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பில் வேரியேஷன் காண்பிக்கும் மிகச்சில சிறந்த நடிகர்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர். அவர் கடைசியாக குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் கில்லி படத்தில் முதலில் அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க வேண்டியதாக இருந்திருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். கே.பாலசந்தர் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் தான் இயக்கிய டூயட் படத்தில் பிரகாஷ் ராஜை அறிமுகப்படுத்தினார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்: முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதனையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பல மொழிகளில் தடம் பதித்தார்.
செல்லத்தை பிராண்டாக்கிய பிரகாஷ் ராஜ்: கில்லி படம் விஜய்யின் கேரியரில் முக்கியமான படம். அப்படத்தில் விஜய் செய்த ஆக்ஷன்களைவிட ஒரு படி அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும்தான். குறிப்பாக த்ரிஷாவை அவர் செல்லம் என்று அழைத்தது இன்றுவரை ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரகாஷ் ராஜ் மிக இயல்பாக ஸ்கோர் செய்திருப்பார். செல்லம் என்ற வார்த்தை பிரகாஷ் ராஜால் பிராண்டானது. இதனால் பெரும்பாலான மேடைகளில் செல்லங்களா என்றுதான் பிரகாஷ் தனது பேச்சை ஆரம்பிப்பார்.

முதலில் நடிக்கவிருந்தது: இந்நிலையில் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க திட்டத்தில் இருந்தாராம் தரணி. அதாவது கில்லியின் ஒரிஜினல் வெர்ஷனான ஒக்குடுவில் பிரகாஷ் ராஜ்தான் வில்லன். எனவே தமிழில் ரீமேக் செய்யும்போது அவரே நடித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்த தரணி, அவருக்கு பதில் பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனை நடிக்க வைக்கலாம் என்றுதான் முதலில் முடிவில் இருந்தாராம். ஆனால் தியாகராஜனோ நோ சொல்லிவிட்டாராம். பிறகுதான் மீண்டும் பிரகாஷ் ராஜை நடிக்க வைத்திருக்கிறார் தரணி.
கில்லி ரீ ரிலீஸ்: கில்லி திரைப்படம் விஜய்க்கும், தரணிக்கும் முக்கியமான படம் ஆகும். ரீமேக் படமாக இருந்தாலும் அது இன்றுவரை தமிழில் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். அந்த அளவுக்கு விஜய்யும், தரணியும் உழைப்பை கொட்டியிருப்பார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி வசூலில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த திரையுலகம் அடேங்கப்பா, ரீ ரிலீஸாகியும் கில்லிக்கு உள்ள மவுசு குறையவில்லையே என்று வாயடைத்துப்போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











