பாலாவின் நந்தா.. அப்போது நடந்த பிரச்னை இதுதான்.. சூர்யாவுக்காக சிவகுமார் வந்தார்.. பிரபலம் ஷேரிங்ஸ்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் இயக்கிய பல படங்கள் தேசிய அளவில் கவனம் ஈர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பாலா வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது விரைவில் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் பாலா பற்றி தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கிறார்.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. குறிப்பாக சியான் விக்ரமுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம்தான் பாலாவுக்கும் சரி விக்ரமுக்கும் நல்ல வாழ்க்கைக்கான கதவை திறந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா: சேது படத்தை குறிஞ்சி மலர் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள் விமர்சகர்களும், ரசிகர்களும். ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பும் உடனடியாக கிடைத்தது. அதன்படி அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல ஹிட்டாகி காலங்கடந்து பேசப்படும் படைப்பாக மாறி நிற்கிறது. சூர்யாவுக்கும் நல்ல பெயரை அந்தப் படம்தான் பெற்றுக்கொடுத்தது. இதற்கிடையே விக்ரம் மகன் துருவ்வை வைத்து இயக்கிய படத்தை விக்ரம் நிராகரித்துவிட்டார்.
வணங்கான்: அவர் இப்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் சூர்யா கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் விலகிவிட்டார். இதனையடுத்து அருண் விஜய் நடித்தார். மேலும் முதலில் ஹீரோயினாக பிரேமலு புகழ் மமிதா பைஜு கமிட்டானார். அவரும் படத்திலிருந்து விலகியதை அடுத்து இப்போது ரோஷினி பிரகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். படமானது விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பாலாஜியின் மகன் பாலாஜி பிரபு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சூர்யா நடித்த நந்தா படத்தை முதலில் நாங்கள்தான் தயாரிப்பதாக இருந்தது. சிவக்குமார் ஒருமுறை பாலாவை அழைத்துக்கொண்டு எனது அப்பாவைப் பார்க்க வந்தார். அப்போது சூர்யா ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறான். எனவே அவன் நடித்து பாலா இயக்கும் படத்தை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒத்துக்கொண்ட அப்பா: அதுமட்டுமின்றி ஆஸ்கார் மூவிஸ் என்னுடைய தாய் வீடு மாதிரி. இந்த பேனரில் நான் கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த உரிமையில்தான் கேட்கிறேன் என்றும் தெரிவித்தார். உடனே என்னுடைய அப்பாவும் நிச்சயமாக செய்யலாம் என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகு பாலா என்னுடைய அப்பாவை ஒருமுறை தனியாக பார்க்க வந்தார். கிட்டத்தட்ட நான்கைந்து மீட்டிங்குகள் அவருடன் நடந்தது. அப்போது பாலாவிடம் நீங்கள் எத்தனை நாட்களில் படம் எடுப்பீர்கள்; பட்ஜெட் எவ்வளவு ஆகும் என கேட்டபோது, பாலாவோ 'அதெல்லாம் எனக்கு தெரியாது சார்’ என்று சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பா; அவரிடம் ஏதோ ஒன்று சொல்லி அனுப்பிவிட்டு; சிவகுமார் சாரிடம் ஃபோன் செய்து வேண்டாம் சார் என்று கூறியதாக பாலாஜி பிரபு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











