ரஜினி பின்னுகிறாரே.. நான்லாம் இப்படி பார்த்ததே இல்லை..மிரண்டுபோன எம்ஜிஆர்.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படம் வரவிருக்கிறது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இதில் அவருடன் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகை பூஜா ஹெக்டேவும் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறது. கூலி படத்தை முடித்திருக்கும் அவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
ராஜா சின்ன ரோஜா படத்தில் ரஜினிக்காக ஒரு பாடல் எழுதப்பட்டிருக்கும். 'சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடல்தான் அது. அந்த வரிக்கேற்பதான் ரஜினிகாந்த்தின் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் அவரது பெயரை சொன்னாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை அத்தனை பேரும் ரசிப்பார்கள். அவ்வளவு பேருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவர் புகழின் உச்சியில் இருக்கிறார். அதுவும் கடந்த 40 வருடங்களாக அவர் அந்த உச்சியிலிருந்து இறங்கவே இல்லை என்பதுதான் இங்கு பெரிய அதிசயம்.
என்ன காரணம்?: பொதுவாக சிலர் விரைவிலேயே புகழின் உச்சிக்கு சென்று சென்ற வேகத்திலேயே கீழே இறங்கிவிடுவார்கள். ஆனால் இத்தனை வருடங்களாக அதே இடத்தில் ரஜினிகாந்த் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது தன்னடக்கமும், எளிமையும், திறமையும்தான். சீனியர் இயக்குநராக இருந்தாலும் ஜூனியர் இயக்குநராக இருந்தாலும் இயக்குநருக்குரிய மரியாதையை அவர் கொடுத்தே தீருவார். அதேபோல் தான் வளர்ந்த சமயத்தில் தனக்கு உதவியவர்களையும், தனக்கு பக்கபலமாக இருந்தவர்களையும் இப்போதுவரை அவர் மறக்கவே இல்லை. அது அவரது இன்னொரு ஸ்பெஷாலிட்டியான குணம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா படமும் முதல் படம்தான்: அதுமட்டுமின்றி ரஜினி இப்போது 170 படங்கள்வரை நடித்து முடித்துவிட்டார். ஆனால் இப்போதும் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படம் போல்தான் அவர் அணுகுவார். அந்த பயமும், பக்தியும்தான் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் நிரந்தரமாக அமர வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இடையில்கூட அவருக்கு சில படங்கள் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து ரஜினியின் சகாப்தம் அவ்வளவுதான் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் தான் யானை இல்லை குதிரை என்று அவர் பேசிய பஞ்ச் டயலாக்கை மீண்டும் நிரூபித்து மெகா ஹிட்டை கொடுத்து அந்த நாற்காலி தனக்குதான் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.
அவ்வளவு கஷ்டம்: திரைப்பட துறைக்குள் அவர் வந்தபோது ஏகப்பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ஒருமுறை அவர் கேரக்டர் ரோல் செய்துகொண்டிருந்தபோது எக்ஸ்ட்ராவாக ஒரு ஆம்லெட் கேட்டதற்கு; அங்கிருந்த ஒருவர் கோழி இன்னும் முட்டை போடவில்லை என்று கூறியிருக்கிறார். அதேபோல் சம்பளம் கேட்டதற்கு சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது; உனக்கு காரும் கிடையாது நடந்தே போ என்று தயாரிப்பாளர் சொல்ல; ஏவிஎம் ஸ்டூடியோவிலிருந்து ரஜினிகாந்த் நடந்தே தனது அறைக்கு சென்ற சம்பவம் எல்லாம் அரங்கேறியிருக்கின்றன. இப்படி ஏகப்பட்ட அனுபவங்களை அவர் தனது வாழ்க்கையில் சேகரித்து வைத்திருக்கிறார்.
திடீர் முடிவு எடுக்கும் ரஜினிகாந்த்: ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் வளர்ந்த பிறகு திடீரென ஒரு முடிவு எடுத்தார் அவர். அதாவது குடும்பம், சினிமா என அத்தனையையும் விட்டுவிட்டு சாமியாராக போய்விடலாம் என்பதுதான் அது. ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் பதறி துடித்தார்கள். அதெல்லாம் கூடாது என்று சொல்லி அவரது வீட்டுக்கு முன்பு மண்ணெண்ணெய் கேனோடு எல்லாம் வந்து நின்றார்கள். ஆனால் ரஜினியோ தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. பிறகு அவரது குருநாத கே.பாலசந்தர் வந்து சொல்லி புரிய வைத்த பிறகுதான் அந்த முடிவிலிருந்த் ரஜினி பின்வாங்கினார். இல்லையென்றால் என்றோ தனது சூப்பர் ஸ்டார் மகுடத்தை கழற்றி வைத்திருப்பார்.

ரஜினி Vs ஜெயலலிதா: இப்படி பல முடிவுகள் எடுத்து அதிர்ச்சி கொடுக்கக்கூடிய ரஜினிகாந்த் தனது மனதில் பட்டதையும் ஓபனாகவே பேசிவிடக்கூடியவர். தனது திருமணத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரேனும் திருப்பதிக்கு வந்தால் உதைப்பேன் என்று ஒரே போடாக போட்டார். அதேபோல் பாட்ஷா பட வெற்றி விழாவின்போது, 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது' என்று ஓபனாக கூறினார். அதுமட்டுமின்றி மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று ஒரே போடாக போட்டார். இப்படி சில சம்பவங்கள் காரணமாக ரஜினிக்கும் ஜெவுக்கும் உச்சக்கட்ட பனிப்போர் திகழ்ந்த காலமெல்லாம் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
பின் வாங்கிய ரஜினிகாந்த்: அப்போதிருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் அவரது ரசிகர்கள் மத்தியில் பலமாகவே எழுந்தன. ஆனால் ரஜினியோ அமைதியாகத்தான் இருந்தார். அதேசமயம் தன்னுடைய படங்களில் அரசியல் வருகை தொடர்பான வசனங்களை பூடகமாக வைத்துவந்தார். மேலும் அவரிடம் கேட்டால் எல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லி கையை மேலே தூக்கிவிடுவார். ஒருகட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர், தான் அரசியலுக்கு வருவதாகவும்; தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள். ஆனால் சில காலத்திலேயே தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லி தனது ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு வேட்டு வைத்தார் வேட்டையன்.

அரசியலில் தொடர்புதான்: அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினி வளர ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போதுவரை அரசியலுடன் அவருக்கு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மேடைகளில் அவரை அவ்வப்போது பார்க்கலாம். மேலும் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை எல்லாம் நேரில் சந்தித்து பரபரப்பை பற்ற வைப்பார். அதேபோல் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் அவர் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார். மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரிடமும் ரஜினிக்கு நல்ல நெருக்கம் இருந்தது.
மிரண்டுபோன எம்ஜிஆர்: இந்நிலையில் ரஜினிகாந்த்தை பார்த்து எம்ஜிஆர் பயந்ததாக பிரபலம் ஒருவர் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளர் முக்தா ரவி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை திரைப்படம் கடந்த 1980ஆம் ஆட்னுவ் எளியானது. அந்தப் படம் வசூலில் எக்கச்சக்க சாதனையை படைத்தது. அந்த சமயத்திலேயே சில நூறுகளில் டிக்கெட்டுகளை விற்றார்கள். அந்த சமயத்தில் அந்தப் படத்தின் வசூல் குறித்த நிலவரம் எம்ஜிஆருக்கு தெரியவந்தது. அதனை பார்த்து அவர், 'இப்படியெல்லாம் நான் பார்த்ததே இல்லை. இவர் என்ன இப்படி பின்னுகிறார்' என்று கூறினாராம். பொதுவாக ரஜினிகாந்த்தை எம்ஜிஆருக்கு பிடிக்காது என்றுதான் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் தற்போது முக்தா ரவியின் இந்தப் பேட்டி சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











