கேரவனில் அந்த வேலையை மட்டும் செய்யவேமாட்டார் ரஜினிகாந்த்.. டாப் சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர் ராஜன்
சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கூலி படத்தில் நடித்துவருகிறார். இந்த வயதிலும் படு சுறுசுறுப்பாக இருக்கும் அவரைப் பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். அதுமட்டுமின்றி ஈகோ பார்க்காமல் பலரை மனம் திறந்து பாராட்டுவதையும் அவரது நல்ல குணமாக பார்த்துவருகிறார்கள். இந்தச் சூழலில் தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் அனைவரையும் காந்தம் போலம் ஈர்த்து வைத்திருக்கிறவர். இப்போது நடிக்கும் பல நடிகர்கள் ரஜினிகாந்த்தை பார்த்து சினிமாவுக்குள் வந்தவர்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் இருக்கிறது. இப்போதும் இள ஹீரோக்களுக்கு செம டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார்.

ராஜன் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினி குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்தார் என்றால் அது மிஸ் ஆகவே ஆகாது. அந்தப் படம் முடியும்வரை வேறு படத்தில் நடிக்கமாட்டார். அதனால்தான் அவரால் இப்போதும் வெற்றிநடை போட முடிகிறது. ஷூட்டிங் 8 மணிக்கு என்றால் 7.30 மணிக்கு மேக்கப்போடு ரெடியாக இருப்பார். ஐந்து நிமிடங்களைக்கூட வீணாக்கமாட்டார்.
சுத்தமாக இருக்காது: கேரவனில் அமர்ந்துகொண்டு சீட்டு விளையாடுவது, யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது என அந்த மாதிரியான வேலைகள் எல்லாம் அவரிடம் சுத்தமாக இருக்கவே இருக்காது. அவர் வந்தார் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இருப்பார். வேலையில் மட்டும்தான் அவரது முழு கவனமும் இருக்கும். சத்யா மூவிஸ் அவரை வைத்து தங்கமகன் திரைப்படத்தை தயாரித்தது. அப்போது அவருக்கு உடல்நிலை திடீரென சரியில்லாமல் போய்விட்டது.
மூன்று மாதங்கள் வரவில்லை: அந்த பிரச்னை காரணமாக அவரால் மூன்று மாதங்களுக்கு ஷூட்டிங்கிற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போதும்கூட அவர் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மூன்று மாதங்கள் முழுக்க முழுக்க சிகிச்சையில் இருந்தார். அதற்கு பிறகு தங்கமகன் படத்தில் நடித்துக்கொடுத்தார். படமும் ரிலீஸாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்போது சத்யா மூவிஸ் நிறுவனம் ரஜினிக்கு பத்து லட்சம் ரூபாய் சம்பள பாக்கியையும் வைத்திருந்தார்கள்.
பணம் அனுப்பினார்கள்: சில நாட்கள் கழித்து ரஜினிக்கு அந்தப் பணத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்து; சூட்கேஸில் பத்து லட்சம் ரூபாயை ரஜினிக்கு கொடுத்து அனுப்பினார்கள். அப்போது 10 லட்சம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அந்தப் பணத்தை ரஜினியின் நண்பர்கள் இருவர் மூன்று நாட்கள் கழித்து ஆர்.எம்.வீரப்பனின் வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். வீரப்பனிடம் அவர்கள், 'ரஜினியின் சம்பள பாக்கியை கொடுத்து அனுப்பினீர்கள். ஆனால் அதை உங்களிடமே அவர் திருப்பி கொடுக்க சொல்லிவிட்டார். மூன்று மாதங்கள் தன்னால் ஷூட்டிங் நின்றுபோனது. எனவே அதற்கான வட்டி, செலவு உள்ளிட்டவைகளை நீங்கள் ஏற்று இருப்பீர்கள். அதனால் அதனை சமன் செய்ய இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு சொல்ல சொன்னதாக தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு ரஜினிக்கு நல்ல மனது" என்றார்.


Click it and Unblock the Notifications