பரவால்ல விடு இங்கிலீஷ்லதானே திட்டுன.. எனக்கு ஒன்னும் புரியல.. ராதிகாவிடம் ஓபனாக சொன்ன பாக்யராஜ்
சென்னை: திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ். இந்தச் சூழலில் அவரை ராதிகா திட்டியது குறித்து பார்க்கலாம்
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
சிறந்த நடிகர்: இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் பாக்யராஜ் அவ்வப்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார். வாகை சூட வா, உத்தமபுத்திரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அட்டகாசமாக நடித்திருந்தார் அவர். இந்தச் சூழலில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்யராஜுக்கும், ராதிகாவுக்கும் நடந்த ரகளையான சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது கிழக்கே போகும் ரயில்தான் ராதிகாவின் முதல் படம். அந்தப் படத்தில் பாக்யராஜ் உதவி இயக்குநர். ராதிகாவுக்கு வசனங்கள் சொல்லிக்கொடுப்பது பாக்யராஜ்தானாம். ஒருமுறை வசனம் சொல்லிக்கொடுக்கும்போது வேண்டுமென்றே ராதிகா கிண்டல் செய்துகொண்டிருந்தாராம். உடனடியாக பாரதிராஜாவிடம் சென்ற பாக்யராஜ், நான் என்ன சொன்னாலும் அந்தப் புள்ள கேட்க மாட்டேங்குது என்று சொன்னாராம்,
உடனே ராதிகாவை அழைத்த பாரதிராஜா, என்ன அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறியாம் என்று சொல்ல; இல்லையே சார் அவர் வேண்டுமென்றே சொல்கிறார் என்றாராம் ராதிகா. உடனே பாரதிராஜாவோ, எங்கே வசனத்தை சொல் பார்ப்போம் என்று கூறியதும்; வசனத்தை சொல்லி முடித்துவிட்டாராம். அதனையடுத்து பாக்யராஜை ஒரு மாதிரி பார்த்தாராம் பாரதிராஜா. அந்த சமயத்தில் இவர் ஒரு ஸ்டுப்பிட் என்று சில வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டிவிட்டாராம். சிறிது நேரம் கழித்து பாக்யராஜிடம் சென்ற ராதிகா, என்ன ராஜா (பாக்யராஜை ராதிகா அப்படித்தான் அழைப்பார்) ரொம்ப திட்டிட்டேனா என்று கேட்க; அதற்கு பாக்யராஜோ விடு இங்கிலீஷலதானே திட்டுன எனக்கு ஒன்னும் புரியல என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டாராம். இதனை ராதிகா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











