Raghuvaran: நாயகன் படத்தில் கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்... இப்படியொரு காரணமா..?
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக வலம் வந்தவர் ரகுவரன்.
ஹீரோ, வில்லன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என வெரைட்டியாக மாஸ் காட்டிய ரகுவரன் இதுவரை கமலுடன் மட்டும் நடித்தது கிடையாது.
நாயகன் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் நோ சொல்லி விட்டாராம் ரகுவரன்.
ஏற்கனவே வெளியான இந்த தகவலை ரகுவரனின் தம்பி உறுதி செய்துள்ளதோடு, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

கமலுடன் நடிக்க மறுத்த ரகுவரன்: ஏழாவது மனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் ரகுவரன். 1982 முதல் 2008ம் ஆண்டுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ள ரகுவரன், தனது 49வது வயதில் உயிரிழந்தார். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்த ரகுவரனுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக ரகுவரனின் வில்லதனம் குறித்து கேட்கவே வேண்டாம்.
தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரகுவரனுக்கு, தமிழில் பாட்ஷா, காதலன், அருணாச்சலம், லவ் டுடே, முகவரி, ஆஹா, அமர்க்களம் ஆகிய படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தன. குறிப்பாக பாட்ஷா படத்தில் ரஜினிக்கு வில்லனாக மார்க் ஆண்டனி என்ற கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். ரஜினி, விஜய், அஜித், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ரகுவரன், கமலுடன் மட்டுமே நடித்தது கிடையாது.
ஆனால், நாயகன் படத்தில் கமலுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதற்கு நோ சொல்லிவிட்டாராம் ரகுவரன். இதுகுறித்து ரகுவரனே பலமுறை கூறியிருந்தாலும், அதற்கான காரணம் பற்றி அதிகம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், ரகுவரனின் தம்பி இந்த சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ரகுவரனின் அடையாளமே ஒல்லியான உடல்வாகும், நீளமான முடியும் தான்.

அப்படியிருக்கையில் நாயகன் படத்தில் கமல் நடித்த போலீஸ் கேரக்டருக்காக முதலில் ரகுவரனிடம் தான் கேட்கப்பட்டதாம். கமலுடன் நடிப்பதற்காக ரகுவரனும் முதலில் ஓக்கே சொல்லிவிட்டாராம். ஆனால், போலீஸ் கேரக்டர் என்பதால் முடியை வெட்ட வேண்டும் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். அதற்கு எக்காரணம் கொண்டும் தனது ஹேர் ஸ்டைலை மாற்றவே மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டாராம்.
இதுகுறித்து ரகுவரனிடம் கமல்ஹாசனும் பேசிப் பார்த்தாராம். ஆனால், நாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை விடவும் தனது ஹேர் ஸ்டைல் தான் முக்கியம் என மறுத்துவிட்டார் ரகுவரன். அதன்பின்னர் தான் அந்த கேரக்டரில் நாசரை நடிக்க வைத்துள்ளனர். முக்கியமாக நாயகன் படத்திற்குப் பின்னர் கமலுடன் நடிப்பதற்கு ரகுவரனுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











