Raghuvaran - எத்தனை பேர்டா ஆறு பேரா?.. வாங்கடா பார்த்துக்கலாம்.. கத்தியோடு சண்டைக்கு சென்ற ரகுவரன்
சென்னை: Raghuvaran (ரகுவரன்) நடிகர் ரகுவரன் நடுரோட்டில் கத்தியுடன் சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது.
சினிமா கனவோடு சென்னைக்கு வந்த ரகுவரனுக்கு எடுத்ததும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிப்பை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்த அவர் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்ட ரகுவரன் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.

மார்க் ஆண்டனி: ரகுவரன் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதற்கு உதாரணமாக பல படங்கள் இருந்தாலும் அதில் முக்கியமனது பாட்ஷா. ரஜினி நடித்த அந்தப் படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ரகுவரன். ஆண்டனி மார்க் ஆண்டனி என அவர் கூறும்போதே ஒரு திகில் உணர்வு ஏற்படும் அளவுக்கு தனது குரலை பயன்படுத்தியிருப்பார். ரஜினியேக்கூட விழா ஒன்றில், இதுவரை எனக்கு வில்லனாக நடித்தவர்களில் இரண்டு பேர்தான் சிறப்பு. அதில் ஒருவர் ரகுவரன். பாட்ஷாவை ரீமேக் செய்யலாம். ஆனால் மார்க் ஆண்டனியாக யாருமே நடிக்க முடியாது என கூறியிருந்தார்.
குணசித்திர வேடம் :ரகுவரன் வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் கலக்கியவர். முகவரி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை பார்க்கும்போது இப்படி ஒரு அண்ணன் கிடைக்கமாட்டாரா என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு நடித்திருப்பார். அதேபோல் அவர் கடைசியாக நடித்த யாரடி நீ மோகினி படத்திலும் அப்பா வேடத்தில் அதகளம் செய்திருப்பார். தனுஷிடம் அவர் பேசும் மாடுலேஷன், தனுஷிடம் கோபப்படுவது என நடிப்பில் அசுர பாய்ச்சலை செலுத்தியிருந்தார்.
திருமணம்: அவர் நடிகை ரோகினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார். ஆனால் ரோகிணிக்கும் ரகுவரனுக்கும் பிரச்னை ஏற்பட திருமண வாழ்க்கை கசப்பிலேயே முடிந்தது. பார்ப்பதற்கு ரொம்பவே அமைதியாக இருக்கும் ரகுவரன் நிஜத்தில் மகா கோபக்காரராம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இப்போது தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது: அதாவது ரகுவரன் ஒருமுறை தனது சகோதரருடன் காரில் சென்றிருக்கிறார். அப்போது இன்னொரு காரில் வந்தவர்கள் ரகுவரன் காரை ஓவர் டேக் பண்ணி நிறுத்தி கெட்ட வார்த்தை சொல்லி திட்டியிருக்கின்றனர். இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த ரகுவரன் தனது காரை வேகமாக ஓட்டி தன்னை திட்டியவர்களின் காரை மறித்திருக்கிறார். அதோடு, காரிலிருந்து இறங்கி பேனட்டில் ஏறி அமர்ந்திருக்கிறார். வாயில் சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு கத்தியை எடுத்துக்கொண்டு; எதிர் தரப்பில் இருந்தவர்களை பார்த்து சரி வாங்கடா எத்தனை பேர் ஆறு பேரா வாங்கடா பார்த்துக்கலாம் என்றாராம்.
உடனடியாக கூட்டமும் சேர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் எதார்த்தமாக அந்த இடத்துக்கு வந்த நடிகர் நாசர் ரகுவரனை உடனடியாக தனது காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டாராம். அதன் பிறகு அந்தக் காரை ரகுவரனின் சகோதரர் ஓட்டி சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தை ரகுவரனின் சகோதரர் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











