Rajini Kamal: "ரஜினியை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க..” நண்பனை விட்டுக் கொடுக்காத கமல்ஹாசன்!!
சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றனர். இயக்குநர் கே பாலச்சந்தரின் பயிற்சி பட்டறையில் இருந்து சினிமாவில் தடம் பதிக்கத் தொடங்கிய இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக இருவருமே தங்களது நட்பு குறித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், ரஜினி குறித்து கமல்ஹாசன் மனம் திறந்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினியை விட்டுக் கொடுக்காத கமல்: சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் இருவருமே இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் கே பாலச்சந்தரின் ஆஸ்தான ஹீரோக்களாக இருவருமே வலம் வந்தனர். அதேபோல், ஆரம்ப காலக்கட்டங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த ரஜினியும் கமலும், அதன்பின்னர் தனித்தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினர்.
தனியாக பிரிந்த பின்னர் ரஜினி தனது ஸ்டைலால் கமர்சியல் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால், உலகநாயகன் கமல்ஹாசன், சினிமாவின் அனைத்து எல்லைகளையும் தனது புதிய முயற்சிகளால் தொட்டுப்பார்த்துவிட்டார். இருப்பினும் இப்போது வரையும் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகின்றனர். கடந்தாண்டு நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கூட, ரஜினியும் கமலும் தங்களது நட்பு குறித்து செம்ம ஜாலியாக பேசிக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் மேடையில் கமல்ஹாசனின் விக்ரம் பட வெற்றியை மனம் திறந்து பாராட்டினார் சூப்பர் ஸ்டார். அதேபோல், மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் நடித்த போது கமலிடம் உதவி கேட்டதையும் ரஜினி சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி வரை வசூலித்து விக்ரம் சாதனையை பிரேக் செய்துள்ளது.
அதேநேரம் ஜெயிலர் படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாக ரசிகர்களும் குற்றம்சாட்டினர். இன்னொருபக்கம் ரஜினி உபி மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது, ராமர் கோயில் சென்றது போன்றவை கடும் சர்ச்சையானது. இதனிடையே ரஜினி குறித்து கமல் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கமல் கொடுத்த பேட்டியொன்றில் அவரிடம் ரஜினியின் ந்டிப்பு குறித்து கேட்கப்பட்டது.
அதாவது, "ரஜினிகாந்த் கமல்ஹாசன் அளவிற்கு நடிப்பதற்கு முயற்சிக்கவில்லை, அவர் ஸ்டைலிஷாக நடிப்பதோடு நிறுத்திக்கொண்டார்" என விமர்சனம் எழுவதாக கேள்வி முன் வைக்கப்படுகிறது. அதற்கு பதில் கூறியுள்ள கமல், "இது ரஜினியை பற்றி தப்பா புரிந்துகொள்ளப்பட்டதாகவே நினைக்கிறேன். நான் அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கும் போது, ரஜினியால் அதனை ஈஸியாக ஸ்டைலிஷாக நடித்து மாஸ் கிரியேட் செய்துவிடுகிறார். இது வரவேற்கப்பட வேண்டியது தான், இதுதான் ரஜினி" என, தனது நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசியுள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











